

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தர்ம தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு ஆர்ஜித சேவைகள் ஏகாந்தமாகவே நடைபெறுகிறது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாறிப்போய் உள்ளன. விஷ்ணு நிவாசம், மாதவம், பத்மாவதி தங்கும் விடுதிகள் என முக்கிய விடுதிகள் அனைத்தும் கரோனா சிகிச்சை மையங்களாக மாறிவிட்டன.
இதனால், பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தினசரி 4 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி வந்த நிலையில் 10 ஆயிரம் லட்டு பிரசாதங்கள் மட்டுமே விற்பனையாகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் ஜூன் மாதம் 7-ம் தேதி வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பல கோடி வருமானத்தை தேவஸ்தானம் இழந்தது. இதேபோல் தினமும் 4 கோடி வரை உண்டியல் வருவாய் இருந்தது. தற்போது ரூ.30 லட்சம் வரை குறைந்துள்ளது.