கை துண்டிக்கப்பட்ட தமிழகப் பெண்ணுக்கு சவுதி அரசிடம் இருந்து நீதி கிடைக்க பிரதமர் வலியுறுத்தல்: மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

கை துண்டிக்கப்பட்ட தமிழகப் பெண்ணுக்கு சவுதி அரசிடம் இருந்து நீதி கிடைக்க பிரதமர் வலியுறுத்தல்: மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
Updated on
2 min read

தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் கை துண்டிக்கப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சவுதி அரசை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தின் காட்பாடி அருகே உள்ள மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் (56). இவர், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். வீட்டு உரிமையாளர் ஆத்திரத்தில் கஸ்தூரியை அடித்து உதைத்து அவரது கையையும் துண்டித்து விட்டார். இதுகுறித்து ஊடகங்களில் தகவல் வெளியானது.

அதன்பின்னர் மத்திய அரசின் தலையீட்டுக்குப் பிறகு கஸ்தூரி நாடு திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சவுதி அரசை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறினார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறையையும் சுஷ்மா கவனித்து வருவதால், கஸ்தூரி பிரச்சினையில் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார்.

இதுகுறித்து மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:

துருக்கியில் கடந்த மாதம் 16-ம் தேதி ஜி20 மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, சவுதி மன்னர் சல்மான் அல் சாத்தை சந்தித்து, பாதிக்கப்பட்ட கஸ் தூரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கஸ்தூரியின் கை துண்டிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன், இந்திய தூதரகம் மூலம் சவுதி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினோம்.

ஆனால், ‘வீட்டு உரிமை யாளருக்கு தெரியாமல் தப்பி யோட முயற்சிக்கும் போது தவறி கீழே விழுந்து கை உடைந்து விட்டது’ என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படி அவர்கள் கூறியிருப்பது மிகவும் மனவேதனை அளித்தது. சவுதி அரசின் விளக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை. கொடூரமாக சித்ரவதை அனுபவித்துள்ள கஸ்தூரிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து சவுதி அரசை வலியுறுத்துவோம்.

வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்கள் கொடுமைக்கு உள்ளாவதை தடுக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தொடர்ந்து மத்திய அரசு பேசி வருகிறது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொள்கின்றனர் என்ற புகார்தான் பெரும்பாலும் வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு செல்பவர்கள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். பதிவு செய்யப்படாத ஏஜென்சிகள் மூலம் செல்பவர்கள்தான் பெரும்பாலும் இதுபோல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அரசிடம் பதிவு பெறாமல் ஆட்களை வெளிநாட்டு அனுப்பினால், அது ஆள்கடத்தல் குற்றமாகும். ஆட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் அதுபோன்ற ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in