Last Updated : 27 May, 2021 04:47 PM

 

Published : 27 May 2021 04:47 PM
Last Updated : 27 May 2021 04:47 PM

'அவர்களின் அப்பா வந்தால்கூட என்னை கைது செய்ய முடியாது': பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

அலோபதி மருத்துவம், அலோபதி மருத்துவர்கள் குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சையாகப் பேசி வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோவில், தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களின் அப்பா வந்தால்கூட தன்னை கைது செய்ய முடியாது என்று சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

அலோபதி மருத்துவம் குறித்து தவறானத் தகவல்களையும் பிரச்சாரத்தையும் யோபா குரு பாபா ராம்தேவ் முன்னெடுத்ததால் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கண்டித்ததைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, வருத்தம் கோரினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை முடிந்த சிலநாட்களுக்குள் பாபா ராம் தேவ் மீண்டும் பேசியுள்ளார். சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “ அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பிரதமர் மோடியின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளது. தடுப்பூசி குறித்து தவறான பிரச்சாரத்தை செய்துவரும் பாபா ராம்தேவ் மீது உடனடியாக தேசவிரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தி நேற்று கடிதம் எழுதியுள்ளது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அவர் அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பாபா ராம்தேவை கைது செய்யுங்கள் என்று ஹேஷ்டேக் உருவாக்கி பிரச்சாரம் செய்யப்படுவது குறித்து பாபா ராம்தேவிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பாபா ராம்தேவ் வீடியோவில் பதில் அளிக்கையில் “ என்னை கைது செய்ய வேண்டும் என்று பேசுபவர்கள் எல்லாம் வெறு வாய்ப்பேச்சுதான், சத்தம்தான் போடமுடியும். என்னைப் பற்றி பலவாறு அவதூறு பரப்பலாம், ஹேஷ்டேக் உருவாக்கி பிரச்சாரம் செய்யலாம். ஆனால் என்னைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் அப்பாக்கள் வந்தால்கூட இந்த சுவாமி பாபா ராம்தேவை கைது செய்ய முடியாது.” எனத் தெரிவித்தார்

பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து டேராடூனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில் “ பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்கும் தொணியில் பேசவில்லை, அவரின் கருத்துக்கள் அலோபதி மருத்துவம்,மருத்துவர்களுக்கு எதிராக இருக்கிறது. அகங்காரத்தின் உச்சத்தில் ராம்தேவ் பேசுகிறார். தான், சட்டத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதாக ராம்தேவ் நினைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x