

சரக்கு, சேவை வரி மசோதாவுக்கும் (ஜிஎஸ்டி) நேஷனல் ஹெரால்டு விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அந்த கட்சி எழுப்பி வருகிறது. இதனால் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்ப தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
அசாம் மாநிலம் குவாஹாட் டிக்கு நேற்று சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜிஎஸ்டி மசோதா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ராகுல் காந்தி அளித்த பதில் வருமாறு:
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஜிஎஸ்டி மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் அப்போது நரேந்திர மோடியும் அருண் ஜேட்லியும் கடுமையாக எதிர்த்தனர்.
காங்கிரஸ் அறிமுகம் செய்த ஜிஎஸ்டி மசோதா மூலம் சிவப்பு நாடா முறை ஒழியும். சரக்குப் போக்குவரத்து எளிதாகும் என்று எடுத்துரைத்தோம். ஆனால் மசோதாவை ஒருபோதும் நிறைவேற்றவிட மாட்டோம் என்று இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்போது அதே மசோதாவை திருத்தம் செய்து நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். இதில் 3 திருத்தங்கள் மக்கள் நலனுக்கு விரோதமாக உள்ளன. அவை உங்களுக்கும் (நிருபர்களுக்கு) தெரியும். அவற்றை நீக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.
ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்களுக்கு விரோதமாக ஜிஎஸ்டி மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நீக்கும்வரை போராடுவோம்.
ஜிஎஸ்டி மசோதாவில் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வரி விதிப்புக்கு ஒரு வரம்பு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் பாஜக அதில் திருத்தம் செய்து வரி வரம்பை நீக்கியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வர வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் அதன் இப்போதைய வடிவம் ஏற்புடையதாக இல்லை.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரம் காரணமாகவே ஜிஎஸ்டி மசோதாவுக்கு காங்கிரஸ் தடை போடுகிறது என்று குற்றம் சாட்டுவது தவறான கண்ணோட்டம். இரண்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதையொட்டியே ராகுல் காந்தி அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளார். குவாஹாட்டி நகரில் நேற்று அவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி 7 கி.மீட்டர் தொலைவுக்கு பாதயாத்திரை சென்றார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் சென்றனர்.