Last Updated : 27 May, 2021 04:30 PM

 

Published : 27 May 2021 04:30 PM
Last Updated : 27 May 2021 04:30 PM

கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தை வரியில்லாமல் இறக்குமதி செய்யலாம்: டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பாதிக்கப்படும் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு தேவையான ஆம்போடெரசின்-பி மருந்தை இறக்குமதிவரி இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

அதேசமயம், இறக்குமதி வரியை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்வரை இறக்குமதியாளர் உறுதிமொழிப்பத்திரம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் கருப்புப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் தொற்றைக் குணப்படுத்தும் ஆம்போடெரசின்-பி மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

இதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயன்றால், இறக்குமதி வரி 28 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதையடுத்து, கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தை இறக்குமதி செய்யும்போது வரிவிலக்கு அளி்க்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அ ரசு தரப்பில் வழக்கறிஞர் கீர்த்திமான் சிங் ஆஜராகினார்.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிடுகையில் “ கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தை இறக்குமதி செய்தால் 28 சதவீதமும் சில நேரங்களில் 78 சதவீதமும் வரி விதி்க்கப்படுகிறது. மருந்துத் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் வரிவிலக்கு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதற்கு மத்தியஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிர்த்திமான் சிங், “ இறக்குமதி வரி எவ்வளவு விதிக்கப்படுகிறது என்பது தெரியாது. மத்திய அரசிடம் கேட்டறி்ந்தபின் விரைவில் முடிவு எடுத்து அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதி்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்க மருந்து அவசியம். இந்தியாவில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும்போது, இறக்குமதி வரி விதிக்க தீவிரமாக அரசு பரிசீலிக்க வேண்டும்.

தனிநபர் யாரேனும் ஆம்போடெரசின்-பி மருந்தை இறக்குமதி செய்தால் அவரை அனுமதி்க்க வேண்டும். உறுதிமொழிப்பத்திரத்தை இறக்குமதியாளர் வழங்கிவிட்டு, மத்திய அரசு முடிவு எடுக்கும்வரை வரி இ்ல்லாமல் இறக்குமதி செய்யலாம்.ஒருவேளை இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்யாவிட்டால், இறக்குமதியாளர் வரி செலுத்த வேண்டும். மத்திய அரசு இறக்குமதி வரித் தள்ளுபடி அளிக்கும் என நம்புகிறோம்.

சுங்கத்துறை வசம் நிறுத்தப்பட்டு இருக்கும் கோவிட் மருந்துகள், பிளாக் ஃபங்கஸ் மருந்துகளை எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

சமீபத்தில் நீதிபதி ராஜீவ் சாக்தேர் பிறப்பித்த உத்தரவில், ஆக்சிஜன் செறியூட்டிகளை இறக்குமதி செய்தால், ஐஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என்றார். ஆனால், அதன்பின்பும் வரிவிதிப்பது மத்திய அரசுக்கு நியாயமாகத் தெரிகிறதா. தள்ளுபடி வழங்கிட வேண்டும்.சிறிது காலத்துக்கு தள்ளுபடி வழங்கிடுங்கள்” எனத் தெரிவித்தனர்.

இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் 3 மாதங்கள் வரை தள்ளுபடி வழங்கிட முடியும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x