

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு, மே மாதம் ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என்று சத்தீஸ்கர் அரசின் பழங்குடி நலத்துறை சுற்றறிக்கை விடுத்து எச்சரித்துள்ளது
சத்தீஸ்கரின் கவுரேலா பேந்த்ரா மார்வாஹி மாவட்டத்தின் பழங்குடி நலத்துறை துணை ஆணையர் கே.எஸ்.மாஸ்ராம் இந்த உத்தரவை கடந்த 21ம் தேதி ஊழியர்களுக்குப் பிறப்பித்துள்ளார். அதிகாரியின் இந்த உத்தரவு சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த துறையில் பணியாற்றும் பல ஊழியர்கள் அதிகாரியின் உத்தரவால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
துணை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், “ பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், பழங்குடி நலத்துறை நடத்தும் பள்ளிகளில் பணியாற்றுவோர், காப்பகங்களில் பணியாற்றுவோர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான அடையாள அட்டை நகலையும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாவிட்டால், மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். இந்த உத்தரவு 21ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேபோல பழங்குடிநலத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள வயதினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணை ஆணையர் மாஸ்ராமிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்கையில் “ நான் பிறப்பித்த இந்த உத்தரவின் நோக்கம் அனைத்து ஊழியர்களும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், கரோனாவுக்கு எதிரானப் போரை தீவிரப்படுத்த வேண்டும், நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதுதான்.
இந்த உத்தரவுக்குப்பின் 95 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திவிட்டனர். யாருடைய ஊதியத்தையும் அடுத்த மாதம் நிறுத்தி வைக்கமாட்டோம். என்னுடைய நோக்கம் அனைத்து ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான், ஊதியத்தை நிறுத்துவது நோக்கமல்ல” எனத் தெரிவித்தார்.