

கரோனா வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம், 5 கோடி டோஸ்களை தருகிறோம் என்று மத்திய அரசிடம் அமெரிக்காவின் பைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. ஆனால், பஞ்சாப் அரசுக்கும், டெல்லி அரசுக்கும் தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது என்று மாடர்னா மற்றும் பைஸர் நிறுவனம் தெரிவித்தது.
மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தசூழலில் தடுப்பூசி விற்பனை குறித்து மத்திய அரசுடன் பைஸர் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
பைஸர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியாவில் எங்கள் தடுப்பூசியை விற்பது தொடர்பாக நாங்கள் மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் விரைவில் பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசுடன் பைஸர் மருந்து நிறுவனம் நடத்திவரும் பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் வழங்கத் தயாராக இருப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் செலுத்தலாம்.
இந்தியாவில் உள்ள உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக பைஸர் தடுப்பூசி செயல்படும். பைஸர் தடுப்பூசி 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை செல்சியஸில் ஒருமாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு ஒன்றில், உருமாற்றம் அடைந்த பி.1.617.2 வைரஸுக்கு எதிராக பைஸர் தடுப்பூசி 87 சதவீதம் வீரியமாகச் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனமும் மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. இந்தியாவில், சிப்லா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்து மாடர்னா நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தியாவிலேயே உற்பத்தியைத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக இந்தியாவின் தடுப்பூசி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 3 முதல் 4 கோடி தடுப்பூசிகளை வழங்கிவிடுவோம் எனத் தெரிவித்துள்ளது.