Last Updated : 27 May, 2021 03:10 AM

 

Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

மத்திய ரிசர்வ் காவல் படையினருக்காக இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை வடிவமைத்த டிஆர்டிஓ

டிஆர்டிஓ தயாரித்துள்ள இருசக்கர ஆம்புலன்ஸ்.

மத்திய ரிசர்வ் காவல் படையினருக்காக இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை வடிவமைத்துள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ).

ரக்ஷிதா (Rakshita) என்று பெயரிடப்பட்ட இந்த இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைவரிடம் வழங்கப்பட்டன.

மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது, தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க முடியாத பகுதிகளில் தாக்குதல் நிகழும் போது, பாதிக்கப்பட்ட வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கவே, இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள டிஆர்டிஓ நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகமான ‘அணு மருத்துவ மற்றும் சார்பு அறிவியல் நிறுவனம்’(இன்மாஸ்) இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளது. இதே ஆய்வகம்தான், கரோனா எதிர்ப்புமருந்தான 2டிஜி-யை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் பின்இருக்கையை நோயாளியின் வசதிக்கேற்ப சாய்த்துக் கொள்ளலாம். வாகனத்திலிருந்து இருக்கையை தனியாக பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு உள்ளேயே இருக்கையோடு நோயாளியை கொண்டு செல்ல முடியும்.

தலை, கை, கால்களை அசையாமல் கட்டுப்படுத்தும் வசதி, நோயாளிக்கான இருக்கை பட்டை, பாதபடி (Foot rest) போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நோயாளியின் உயரத்திற்கேற்ப பாதபடியை மாற்றியமைக்கலாம்.

எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதிகளை சேர்த்து பிடிக்கும் காற்றழுத்தப் பைகள் (Air Splinter), ஆக்சிஜன், அவசரகால மருத்துவப் பொருட்கள் என மேலும் பல வசதிகளும் இதில் உள்ளன.

நோயாளியின் நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட அடிப்படை உடலியல் அளவீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஓட்டுநருக்கு உடனுக்குடன் கணிணி திரையில் காட்டும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அளவீடுகள் ஆபத்தான கட்டத்துக்கு வந்தால் மணி ஒலித்து ஓட்டுநரை எச்சரிக்கை செய்யும்.

பிற இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்களில், பக்க இணைப்புவாகனம் (Side Car) பயன்படுத்தப்படும். இதனால் வாகனத்தின் அகலம் அதிகமாகி குறுகலான பகுதிகளில் அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்படும். இதனைக் கருத்தில்கொண்டு, பின் இருக்கையிலேயே நோயாளிக்கான இடத்தை வசதிகளுடனும், பாதுகாப்புடனும் அமைத்திருப்பது இந்த வாகனத்தின் சிறப்பு.

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இல்லத்தரசிகள் அமர்ந்து செல்லும் விதத்தை கவனித்து, அந்த உந்துதலால் பின் இருக்கையில் நோயாளிக்கான இருக்கையை அமைக்கும் யோசனை ஏற்பட்டதாக வடிவமைத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x