கேஜ்ரிவால் ஒரு முகமதுபின் துக்ளக்: காங்கிரஸ் சாடல்
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய தீர்வு முகமதுபின் துக்ளக் நினைவை எழுப்புகிறது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
காற்றில் மாசு கலப்பை குறைக்க வெள்ளிக்கிழமையன்று டெல்லி அரசு சில திட்டங்களை அறிவித்திருந்தது. இதில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை குறைக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து இத்திட்டங்களை கடுமையாக சாடிய காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி, “கேஜ்ரிவால் ஒரு முதிர்ச்சியற்ற முதல்வர், பொதுப்போக்குவரத்து திறன் என்னவென்பதைப் பற்றி இவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சூழ்நிலை என்னவென்பதே தெரியாமல் துக்ளக் பாணி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். முதலில் இத்தனை மக்களுக்கான போதுமான போக்குவரத்து வாகனங்கள் உள்ளனவா என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
பேருந்து போக்குவரத்தை குறைப்பதெல்லாம் பொதுப்போக்குவரத்து வலுவான உள்ள நாடுகளில்தான் சாத்தியம். கேஜ்ரிவால் மிகவும் வெறுப்படைந்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். துக்ளக் டெல்லிக்கு என்ன செய்தாரோ கேஜ்ரிவால் அதையே டெல்லிக்கு செய்து வருகிறார். ஷீலா திக்ஷித்துக்குப் பிறகு அனைத்தையும் சீரழிக்கிறார் கேஜ்ரிவால். இவர் செய்வதெல்லாம் மலிவான ஸ்டண்ட் மட்டுமே” என்றார்.
