

பிஹார் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சமைப்பவர் விதவை என்பதால் அவரை சமைக்கவிடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர்.
பிஹார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டம், கல்யாண்பூர் கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. பாட்னாவிலிருந்து 200 கிமீ தொலை வில் உள்ள இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 734 மாணவர்கள் படிக்கின்றனர்.
அங்கு இரண்டு குழந்தை களுக்கு தாயான சுனிதா, ரூ.1000 மாத சம்பளத்தில் சமையல் பணிக்கு அண்மையில் நியமிக்கப்பட்டார். அவர் விதவை என்பதால் பள்ளி யில் சமையல் செய்யக் கூடாது என்று கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் செய்து கடந்த புதன்கிழமை முதல் பள்ளியை இழுத்து மூடச் செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் சுனிதா முறையிட்டார். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஆட்சியர் ராகுல் குமார் நேற்றுமுன்தினம் நேரில் சென்றார். கிராமத்து மக்களுடன் பேசி அவர்களின் அறியாமையைப் போக்கினார். பின்னர் அந்தப் பெண் சமைத்த மதிய உணவை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்.