

கிரிக்கெட் விளையாட்டு நிர்வாகத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலர் மற்றும் எம்.பி.க்கள் சிலர் மீதும் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத் பரபரப்பு குற்றம் சுமத்தி உள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி இருந்த 13 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறி வருகிறார். முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைத்துள்ளார்.
இதற்கிடையில், பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்தும், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். அதனால், பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கட்சியில் இருந்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து கீர்த்தி ஆசாத் மேலும் பலர் மீது குற்றம் சாட்டினார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்து விசாரித்த விசாரணைக் குழு, அருண் ஜேட்லி மீது குற்ற வழக்கு தொடர பரிந்துரை செய்துள்ளது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அதுபோல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிப்பதில் நடந்த முறைகேடுகளில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலர் அனுராக் தாக்குர் மற்றும் வேறு எம்.பி.க்களுக்கும் தொடர்பு உள்ளது.
நிறுவனங்கள் சட்டம் 1956-ன் படி எல்லா இயக்குநர்களுக்கும் குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கிரிக்கெட் சங்கத்தில் இருந்த ஜேட்லி உட்பட 27 செயல் உறுப்பினர்களுக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை. எனவே, நிறுவனங்கள் சட்டம் 5ஜி-யின்படி அவர்கள் மீது பதிவாளர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது சட்டத்தை விட இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரம் படைத்தது என்பதையே காட்டுகிறது.
மேலும், கிரிக்கெட் விளையாட்டு நிர்வாகம் தோல்வி அடைந்த விஷயத்தில் அருண் ஜேட்லி, கிரிக்கெட் வாரிய செயலர் அனுராக் தாக்குர், ராஜீவ் சுக்லா, ஜோதிராதித்ய சிந்தியா, பரூக் அப்துல்லா, பிரபுல் படேல் ஆகியோருக்கும் தொடர்புள்ளது. இவர்களில் படேல் தவிர (இவர் தற்போது அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக இருக்கிறார்.) இப்போதும் கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடுபவர்களாக உள்ளனர்.
ஒரே நேரத்தில் 2 தொப்பிகளை அணிய முடியாது. ஒன்று நீங்கள் எம்.பி.யாக இருக்க வேண்டும். அல்லது விளையாட்டுடன் தொடர்பு உள்ளவராக இருக்க வேண்டும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூட கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிகளவு ஈடுபாடு காட்டி உள்ளார். எனவே, அரசியல்வாதிகள் விளையாட்டு விஷயங்களில் தலையிடுவதற்கு அனுமதிக்க கூடாது.
வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருந்த டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள் எல்லாம் இப்போது ஊழல் மூலம் கோடீஸ்வரர்களாக மாறி உள்ளனர். பண்ணை வீடுகள் உட்பட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். ஒரு போட்டியில் வீரர்களை தேர்வு செய்ய ரூ.4 லட்சம், ஒரு தொடர் முழுவதற்கும் வீரரை தேர்வு செய்ய ரூ.10 லட்சம் என லஞ்சம் வாங்கி உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். ஊழல் பணத்தில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து சமூக பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கீர்த்தி ஆசாத் கூறினார்.
இதற்கிடையில், “கிரிக்கெட் அணியில் தனது மகனை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த பெண்ணிடம் டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள் பாலியல் ரீதியான ஆதாயம் கேட்டுள்ளனர்” என்று அர்விந்த் கேஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் கேஜ்கரிவாலின் கருத்தை கீர்த்தி ஆசாத் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
கீர்த்தி ஆசாத், கேஜ்ரிவால் மீது டெல்லி கிரிக்கெட் சங்கம் அவதூறு வழக்கு
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் மீது ஆதாரமற்ற, அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை எந்தவித நிரூபணமும் இல்லாமல் கீர்த்தி ஆசாத்தும், அரவிந்த் கேஜ்ரிவாலும் தெரிவித்து வருகின்றனர், இதனால் கீர்த்தி ஆசாத், கேஜ்ரிவால், மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிலர் மீது அவதூறு வழக்கு தொடர முடிவெடுத்திருப்பதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.