Last Updated : 26 May, 2021 05:49 PM

 

Published : 26 May 2021 05:49 PM
Last Updated : 26 May 2021 05:49 PM

கரோனாவை விரட்ட சாணப் புகை போட்டு ஹோமம் செய்த கர்நாடக பாஜக எம்எல்ஏ 

பெலகாவியில் கரோனாவை விரட்ட அக்னி ஹோத்ர ஹோமப் புகை போட்ட பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல்.

பெங்களூரு

கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் கரோனா வைரஸை விரட்ட பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல், வீதிகளுக்கு சாணப் புகை போட்டு ஹோமம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கர்நாடக அரசு வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெலகாவி பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல், கரோனாவை விரட்டுவதாகக் கூறி, இன்று தனது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோருடன் பெலகாவி டவுன் பகுதியில் சாணப் புகை போட்டு அக்னி ஹோத்ர ஹோமம் மேற்கொண்டார்.

அப்போது ஆதரவாளர்கள், தள்ளுவண்டியில் சாணம், வேப்பிலை, கற்பூரம் ஆகியவற்றைப் போட்டு புகையை உருவாக்கி வீதிவீதியாக இழுத்துச் சென்றனர். தெருமுனைகளிலும், வீடுகளின் முன்பாகவும் சாணம் குவிக்கப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டது. இதனால் பெலகாவி டவுன் பகுதி புகை சூழ்ந்து காணப்பட்டதால், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து காங்கிரஸ், மஜத, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அபய் பாட்டீல் எம்எல்ஏ கூறும்போது, ''எனக்கு நெருக்கமான ஆயுர்வேத மருத்துவர்கள் சாணம், வேப்பிலை, கற்பூரம் கலந்து புகை போட்டால் கரோனா வைரஸ் அழிந்துவிடும் என அறிவுரை வழங்கினர். அதன்படி எனது தொகுதி மக்களின் நலனுக்காகச் சாணம் கலந்து அக்னி ஹோத்ர ஹோமம் நடத்தினேன். நான் மருத்துவமனைக்கு அருகிலோ, நோயாளிகளின் வீடுகளுக்கு அருகிலோ இதைச் செய்யவில்லை. நாங்கள் நடத்திய ஹோமத்தின் மூலம் எழுந்த புகையால் யாரும் பாதிக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x