

அலோபதி மருத்துவம், மருத்துவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை அடுத்த 15 நாட்களுக்குள் யோகா குரு பாபா ராம்தேவ் கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை உத்தரகாண்ட் இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் செயலாளர் அஜய் கண்ணா, தனது வழக்கறிஞர் நீரஜ் பாண்டே மூலம் அனுப்பியுள்ளார்.
யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அலோபதி மருத்துவம் குறித்து அவதூறாகப் பேசிய வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில், “அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல். லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டும் அவை கரோனா நோயாளிகளைக் காக்கவில்லை” என ஆதாரமற்ற தகவல்களை பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடும் கண்டனம் தெரிவித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் எழுதி, பாபா ராம்தேவ் அவரின் கருத்தை வாபஸ் பெறக் கோரி வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் ஐஎம்ஏ தனியாக, பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “ஐஎம்ஏ அமைப்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் நோக்கில் அலோபதி மருத்துவத்தை ராம்தேவ் அவதூறு பேசியுள்ளார்.
பாபா ராம்தேவ் பேசியது, ஐபிசி 499-ன் பிரிவின்படி கிரிமினல் குற்றமாகும். பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம், மருத்துவர்கள் குறித்துப் பேசியதற்கு அடுத்த 15 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும்.
இல்லாவிட்டால், ஐஎம்ஏ அமைப்புக்கு ரூ.1000 கோடி, அதாவது ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும். அதுமட்டுமல்லாமல் கரோனில் கிட் குறித்து அனைத்துவிதமான தளங்களிலும் தவறான புரிதலை உண்டாக்கும் வகையில் செய்துவரும் விளம்பரத்தையும் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பாபா ராம்தேவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.