

யாஸ் புயல் ஒடிசா மாநிலம் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து பெரும் கனமழை பெய்து வருகிறது. 17 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.
இது ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் பாரதீப் பகுதியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது. பின்னர் புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்தது.
யாஸ் புயல் இன்று காலை 4.30 மணியளவில், வடமேற்கு வங்க கடல் பகுதியில் தம்ரா என்ற இடத்துக்கு கிழக்கு 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.
இது இன்று மதியம் வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே பாலசோர் அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 130 முதல் 155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. பாலசூர் பகுதியில் 2 முதல் 4 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பின.
இதனால் அந்த பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் வரை ஆனது. யாஸ் புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக ஒடிசாவில் 6 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 11.5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புயல் காரணமாக மும்பை மற்றும் கொல்கட்டா, புவனேஸ்வர் இடையே விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கொல்கட்டா விமான நிலையம் இன்று இரவு 7:45 மணி வரையிலும், புவனேஸ்வர் விமான நிலையம் நாளை காலை 5: 00 மணி வரையிலும், மூடப்பட்டிருக்கும். துர்காபூர், ரூர்கேலா விமான நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன.