இந்தியாவில் கரோனா 2-வது அலை உருவாக சீனா காரணமாக இருக்கலாம்: விஜய் வர்க்கியா பேச்சு

பாஜக தேசியப் பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா | படம் உதவி ட்விட்டர்
பாஜக தேசியப் பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா | படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகியது குறித்து விரிவாக வாதிக்கப்பட வேண்டும். 2-வது அலை தானாக உருவானதா அல்லது சீனாவின் சதியால் உருவானதா என்று ஆலோசிக்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் விஜய் வர்க்கியாவின் இந்த பேச்சு குறித்த வீடியோபெரும் வைரலாகி வருகிறது, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது.

இந்தூரில் திங்கள்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “இந்தியாவில் கரோனா 2-வது அலை உருவாகியுள்ளது. இந்த 2-வது அலை தானாக உருவானதா அல்லது சிலரால் அனுப்பிவிடப்பட்டதா என்பது ஆலோசிக்கப்பட வேண்டியது அவசியம். ஏனென்றால் சீனாவுக்கு எதிராக உலகில் சவால்விடக்கூடிய நாடு ஒன்று இருக்கிறதென்றால் அது இந்தியாதான். பிரதமர் மோடி சீனாவுக்கு எதிராக சவால்விடுத்துள்ளார்.

இது சீனா நம்முடன் நடத்தும், நம்மை துன்புறுத்தும் வைரஸ் போர் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த கரோனா 2-வது அலை என்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இல்லை. கரோனா 2-வது அலை என்பது தாக்குதலா அல்லது அலையா என்பது உறுதியாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த கருத்துக் குறித்து விஜய் வர்க்கியாவிடம் தொடர்பு கொண்டு பேச பிடிஐ நிருபர் முயன்ற போது அவர் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை.

விஜய் வர்க்கியாவின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நீலப் சுக்லா கூறுகையில் “ இந்தியா மீது சீனா பயோ-வார் தொடுத்துள்ளது என்று விஜய் வர்க்கியா கூறுகிறாரா. பாஜகவில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் விஜய் வர்க்கியா, இந்த கருத்து குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பாஜக தலைமையிலான மத்திய அரசின் மெத்தனமான போக்குதான் 2-வது அலைக்கு காரணம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in