சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக சுபோத் குமார் நியமனம்

சிபிஐ அமைப்பின் புதியஇயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சுபோத்குமார் ஜெய்ஸ்வால் | படம் உதவி ட்விட்டர்
சிபிஐ அமைப்பின் புதியஇயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சுபோத்குமார் ஜெய்ஸ்வால் | படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read


மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் தலைவராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ அமைப்பின் இயக்குநராக அடுத்த இரு ஆண்டுகளுக்கு நியமித்து மத்திய பணியாளர்பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1985-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சுபோத்குமார் மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்தவர். இதற்கு முன் மகாராஷ்டிரா மாநில காவல் டிஜிபியாகவும் சுபோத்குமார் பணியாற்றியுள்ளார்.

கடந்த பி்ப்ரவரி3-ம் தேதி சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்று சென்றபின் கடந்த 3 மாதங்களாக இயக்குநர் இல்லாமல் சிபிஐ அமைப்பு இயங்கி வந்தது. 1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குஜராத் பிரிவு அதிகாரியான பிரவீண் சின்ஹா பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய குழு இந்த ஜெய்ஸ்வால் பெயரை அடுத்த சிபிஐ இயக்குநருக்குப் பரிந்துரைத்தது.

இந்த குழுவின் ஆலோசனைக்கூட்டத்தில் அதிகாரிகளை தேர்வு செய்யும் முறை சரியில்லை என்று காங்கிரஸ் எம்.பியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி தெரிவித்தார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அளித்த பேட்டியில், “ சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் முறை கமிட்டியின் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கிறது. கடந்த 11ம் தேதி நான் 101 பேரின் பெயர்கள் கொடுத்தேன், இன்று 10 பேரை பட்டியலிட்டனர், மாலை 4 மணிக்கு 6 பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர். மத்திய பணியாளர் பயிற்சி்த்துறையின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.

சிபிஐ அமைப்புக்கு முழுநேர இயக்குநரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சுபோத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்புச் சட்டத்தின்கீழ் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை நியமிக்க மத்திய அரசு தயங்குகிறது என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ இயக்குநர் ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே அடுத்த இயக்குநருக்கான தேர்வை நடத்த வேண்டும், குழுவின் கூட்டத்தைக் கூட்டி புதிய இயக்குநரை தேர்வு செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் பதில் அளித்த மத்திய அரசு மே 2்ம்தேதிக்குப்பின், புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் குழு கூடும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in