Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் நடந்த வன்முறைக்கு காரணமானோரை தண்டிக்க வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் 146 பேர் குடியரசுத் தலைவருக்கு கடிதம்

மேற்கு வங்க வன்முறைக்கு காரணமான நபர்களை தப்பிக்கவிடாமல் தண்டிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 146 பேர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக நடந்தது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிந்த பிறகு, மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டனர்.

ஏராளமான பாஜக தொண்டர்கள் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேறினர். பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு திரிணமூல் காங்கிரஸே காரணம் என்று பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறைக்கு காரணமான நபர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சி.படேல் உள்ளிட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் 146 பேர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வரலாறு காணாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பது உண்மை. ஊடகங்கள் வாயிலாகவும், நேரில் பார்த்த சாட்சியங்கள் மூலமாகவும் இந்த சம்பவங்கள் தெரியவந்துள்ளன. சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கொலை, பாலியல் பலாத்கார சம்பவம், தனி நபர் மீது தாக்குதல் உள்ளிட்டவையும் அரங்கேறியுள்ளன. இந்த தேச விரோத சக்திகளால் பலர் தங்களது வீடுகளை இழந்துவிட்டு வேறு மாநிலத்துக்கு அஞ்சிஓடியுள்ளனர். உயிருக்கு பயந்து வாழும்சூழலும் அங்கு நிலவுகிறது.

இதன்மூலம் அங்கு மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் முழுமையாகச் செயல்படவில்லை என்பது தெரியவருகிறது. அவர்கள் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டனர்.

இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தொடரக் கூடாது. இதுதொடர்ந்தால் இந்தியாவின் பழமையான ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்துவிடும்.

இந்த சம்பவங்களுக்குக் காரணமான நபர்கள் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.

முதலாவதாக, கடமையை செய்யத் தவறிய அரசு அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்கவேண்டும். இரண்டாவதாக அரசியல் லாபத்துக்காக இதைத் தூண்டுபவர் யார் என்பதை கண்டறியவேண்டும். மூன்றாவதாக அனைத்து வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யவேண்டும்.

இறுதியாக குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படவேண்டும். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைதொடர்பாக மேற்கு வங்க அரசு பதில்அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

மேற்குவங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. தேர்தலுக்குப் பிறகு மேற்குவங்கம் முழுவதும் பாஜகவினரை குறிவைத்து அரசியல் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அருண் முகர்ஜி, பிரமிதா டே, பூபன் ஹால்டர், பிரசாந்த தாஸ் உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், ‘‘மேற்குவங்க அரசியல் வன்முறையில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். போலீஸ் ஆதரவுடன் வன்முறைகள் அரங்கேறிவருகின்றன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அரசியல் வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க வேண்டும். விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு முகாம்களை அமைத்து அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.

நீதிபதிகள் வினீத் சரண், பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் ஆஜரானார்.

அவர் கூறும்போது, ‘‘தேசிய மகளிர்ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மேற்குவங்க வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளன. அந்த அமைப்புகளின் அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’’ என்று கோரினார்.

நீதிபதிகள் கூறும்போது, ‘‘அரசியல் வன்முறைகள் தொடர்பாக மேற்குவங்க அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் அந்த மாநில அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். ஜூன் 8-ம் தேதி வழக்குமீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.இந்த வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் ஆகிய அமைப்புகளையும் மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

மேற்குவங்க அரசியல் வன்முறையில் 2 பாஜக தொண்டர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பிரதான வழக்கோடு சேர்த்து நேற்று விசாரிக்கப்பட்டது.

மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, ‘‘உயிரிழப்பு தொடர்பாக மாநில போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. அந்த அமர்வு சில வழிகாட்டு நெறிகளை வழங்கியுள்ளது.அவற்றை மாநில அரசு கண்டிப்புடன் பின்பற்றி வருகிறது’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, ‘‘2 பாஜக தொண்டர்கள் உயிரிழப்பு தொடர்பாக மேற்குவங்க அரசு 2 வாரங்களுக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x