Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமைத்த உணவையோ அல்லது உணவுப் பொருட்களையோ வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம்தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கால், பொதுமக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகினர்.

குறிப்பாக, வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைஇழந்ததால், தங்கள் சொந்தமாநிலங்களுக்கு நடந்தே செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். உணவு இல்லாமலும்,உடல்நலக் குறைவாலும் பாதிவழியிலேயே நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் உயிரிழந்தனர். இதை யடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கின.

இந்நிலையில், கரோனா வைரஸின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து நேற்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஊடங்கு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் உழன்று வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களையோ அல்லது சமைத்த உணவுகளையோ வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, நாடு முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணியை மத்திய, மாநில அரசுகள் விரைந்து முடிக்க வேண்டும். அப்பொழுது தான், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் புலம்பெயர்ந்த அல்லது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக கிடைக்கப் பெறுவதை நம்மால் உறுதி செய்ய முடியும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய தேசிய தரவுத் தளத்தை (டேட்டா பேஸ்) உருவாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்டிருந்தது.

இந்தப் பணி தற்போது எந்த அளவில் நடந்து கொண்டிருக் கிறது என்பது குறித்து விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆக்சிஜன் சிலிண்டர்களின் விநியோகத்தை கண்காணிப்பது போல, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்கள் அனைவரையும் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு தங்கள் உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x