திடீர் பாக். பயணம்: மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி

திடீர் பாக். பயணம்: மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி
Updated on
1 min read

திடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது.

கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார்.

டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, "நாம் நமது தேசிய அடையாளங்களை எந்த வகையில் நினைவில் கொள்ளப்போகிறோம் என்ற வகையிலான கனவை ஒரு நாள் நான் கண்டேன்.

ஒருவர் தனது காலை உணவை அமிர்தசரசிலும், மதிய உணவு லாகூரிலும், இரவு உணவை காபூலிலும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படித் தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். எல்லைகள் பிரிக்கப்பட்ட பின் அந்த வழக்கம் இல்லாமல் போனது.

அதுபோல நமது பேரக்குழந்தைகளும் வாழ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

அவருக்கும் பின் பிரதமரான நரேந்திர மோடி தற்போது மன்மோகன் சிங்கின் கனவை நிறைவேற்றியுள்ளார். ஆப்கானிஸ்தான் பயணத்தில் இருந்த அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென லாகூர் சென்றதன் மூலம் அந்த கனவு (சற்று தலைகீழாக) நிறைவேற்றி இருக்கிறார்.

வெள்ளிக்கிழமை காலை மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட பிரதமர் தனது காலை உணவை காபூலில் உண்டார். பின்னர் திடீரென லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திக்கச் சென்ற அவர், அவரோடு மதிய உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நேரம் குறைவாக இருந்ததால் இருவரும் தேநீர் அருந்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சரியாக இரவு உணவு நேரத்தில் நரேந்திர மோடி இந்தியா திரும்பி டெல்லியில் தனது இரவு உணவை உண்டார்.

ஆக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கனவை வேறு வடிவில் நனவாக்கி, அமிர்தசரஸுக்கு பதிலாக டெல்லியில் மோடி தனது இரவு உணவை எடுத்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in