

ஜல்லிக்கட்டு உட்பட மேலும் சில எருது பந்தயங்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் ஜனவரி 1-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவில் எருது வண்டி பந்தயம், கர்நாடகாவில் கம்பளா, பஞ்சாபில் எருது பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளை நாம் மதிக்க வேண்டும். அதேநேரம் விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.
எனவே, இது தொடர்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த நல்ல செய்தி வரும் ஜனவரி 1-ம் தேதி வெளியிடப்படும். இதன்மூலம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய போட்டிகள் தொடர்ந்து நடத்த வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், ஜனவரி 1-ம் தேதி இதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு அல்லது எருது பந்தயங்களை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. விலங்குகள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் இந்தப் போட்டிகள் நடைபெறா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுகளுக்கும் விலங்குகள் நல வாரியத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.