

உத்தரகாண்டில் 2009-ல் போலி என்கவுன்ட்டர் நடத்தி எம்பிஏ மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 17 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை தொடர்பான வாதம் சனிக்கிழமை முடிந்தது.
தண்டனையை நிர்ணயிக்க நீதிபதி விசாரணை நடத்தியபோது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போலீஸாரில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கறிஞர் பிரஜேஷ் குமார் சுக்லா சிபிஐ தரப்பில் ஆஜராகி, ‘இந்திய தண்டனைச் சட்டம் 320வது பிரிவின் கீழ் கொலைக்குற்றம் இழைத்துள்ள 7 போலீஸாருக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும்’ என்றார்.
போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 18 போலீஸாரில் 7 பேர் (6 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு கான்ஸ்டபிள்) மாணவரை கொன்ற குற்றம் புரிந்தவர்கள் என்று நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. மற்றவர்கள் கொலைசெய்வதற்காக மாணவரை கடத்தியதாகவும், கிரிமினல் சதி செயலில் ஈடுபட்டதாகவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.
வேலையில் சேர்வதற்காக 2009 ஜூலை மாதம் 3ம்தேதி டேராடூன் சென்றபோது போலி என்கவுன்ட்டரில் எம்.பி.ஏ. மாணவர் ரணவீர் சிங் கொல்லப்பட்டார்.
உத்தரகாண்டுக்கு 2009 ஜூலை மாதம் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் சென்றபோது ரணவீர் சிங் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீஸார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.