

மே.வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் நடந்த வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும், வன்முறையை நிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மே.வங்க அரசு பதில் அளிக்க இன்று உத்தரவி்ட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைப்பிடித்தது. தேர்தல் முடிந்தபின் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பாஜக தொண்டர்கள் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேறினர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் ஆணையம் ஆகியவற்றையும் மனுதாரரகச் சேர்க்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
‘‘வன்முறைச் சம்பவத்தால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததுள்ளார்கள், அவர்களை மீண்டும் குடியமர்த்தி நிவாரணம் வழங்கிட உத்தரவிட வேண்டும். போலீஸார் துணையுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், குண்டர்களும் சேர்ந்து மக்களைத் தாக்குகின்றனர். இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம் போன்றவற்றை வழங்கிட உத்தரவிடவேண்டும்’’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதைபோன்ற மனுவை வழக்கறிஞர் அருண் முகர்ஜி உள்ளிட்ட 5 சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்தனர். அவர்கள் மனுவில், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து தேர்தலுக்கு பிந்தைய கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், பிஆர் காவே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ‘‘மேற்கு வங்க அரசு உரிய பதில் மனுவை வரும் ஜூன் 7-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.
ஜூன் 2-வது வாரத்தில் மனு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும். மனுதாரர் கோரிக்கையான தேசியமனிதஉரிமைகள் ஆணையம், மகளிர் குழந்தைகள் உரிமை ஆணையத்தையும் மனுதாரர்களாகச் சேர்க்க அனுமதியளிக்கிறோம் “ என உத்தரவிட்டனர்.