

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு டூல்கிட்டை கருவியாக பாஜக பயன்படுத்துகிறது, தனக்கு பின்னடைவு வரும்போது, பல்வேறு வழிகளில் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறது என்று சிவசேனா கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் நற்பெயரையும், பிரதமர் மோடி கரோனா வைரஸ் பரவல் விவகாரத்தை கையாள்வதையும் விமர்சித்து காங்கிரஸ் கட்சி டூல்கிட்டை தயாரித்துள்ளது என பாஜக குற்றம்சாட்டியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்தது, பொய்யானபிரச்சாரங்களை பாஜக பரப்புகிறார்கள் என கண்டித்தது.
இதனிடையே டூல்கிட் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார், நேற்று ட்விட்டர் அலுவலகத்துக்குச் சென்று விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி, ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது, அச்சப்படாதது என்று ராகுல்காந்தியும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் இந்த டூல்கிட் விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவத்திடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது:
சமூக ஊடகம் அல்லது டூல் கிட்டை முன்பு பாஜகவும் பயன்படுத்தி இருந்தது. ஆனால், தற்போது பாஜகவுக்கு பின்னடைவு வரும்போது, ரெய்டு நடத்துகிறது, எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கிறது. நாங்கள் இதை கவனித்து வருகிறோம், ரசித்து வருகிறோம்.
சமூக ஊடகங்கள் குறித்தும், டூல்கிட் குறித்தும் இந்திய அளவிலும், உலகளவிலும் பெரிய விவாதம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக விரிவாகப் பேசவிரும்பவில்லை.
கங்கை நதியில் ஏராளமான உடல்கள் மிதந்து வந்தபோது, அது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஏதாவது கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்த்தேன். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். ராமர் கோயில் விவகாரத்தில் அளித்த முக்கியத்துவத்தைப் போல்,கங்கை நதிக்கும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.