பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பால்பொருட்கள் பிரிவு துணைத் தலைவர் கரோனாவால் பலி

பாபா ராம்தேவ் | படம் உதவி: ட்விட்டர்.
பாபா ராம்தேவ் | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
1 min read

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் பிரிவின் துணைத் தலைவர் சுனில் பன்சால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சுனில் பன்சாலுக்கு வழங்கப்பட்ட அலோபதி சிகிச்சையில் எந்தவிதத்திலும் தலையிடவில்லை என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலோபதி மருத்துவம் குறித்து அவதூறாகப் பேசியதாக பாபா ராம்தேவ் மீது சர்ச்சை எழுந்தது. இதற்கு ஐஎம்ஏ, டிஎம்ஏ கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலையிட்டதன் அடிப்படையில் பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, வருத்தம் கோரினார். இந்தச் சூழலில் பதஞ்சலி நிறுவனத்தின் பால்பொருட்கள் பிரிவின் துணைத் தலைவர் கரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் பால்பொருட்கள் பிரிவில் துணைத் தலைவராக இருந்த சுனில் பன்சால் (57) கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார்.

2018ஆம் ஆண்டிலிருந்து பதஞ்சலி நிறுவனத்தில் சுனில் பன்சால் பணியாற்றி வந்தார். பன்சாலின் மனைவி ராஜஸ்தான் அரசின் சுகாதாரத்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் பிரிவின் துணைத் தலைவர் சுனில் பன்சால் கரோனா தொற்றால் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் மனைவி ராஜஸ்தான் அரசின் சுகாதாரத்துறையில் முக்கிய அதிகாரியாக இருக்கிறார்.

சுனில் பன்சாலுக்கு வழங்கப்பட்ட அலோபதி சிகிச்சையில் எந்தவிதத்திலும் பதஞ்சலி நிறுவனம் தலையிடவில்லை. பன்சாலின் மனைவியின் கண்காணிப்பில்தான் சிகிச்சை நடந்தது. பன்சாலின் உடல்நலத்தின் மீது கவலை கொண்டு தொடர்ந்து அவரின் மனைவியிடம் விசாரித்தோம். எங்கள் நிறுவனத்தின் துடிப்புமிக்க அதிகாரியான பன்சாலை இழந்தது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது, துரதிர்ஷ்டமானது” எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in