

மாநில அரசுகள் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியது சுயநலமான முடிவு. மாடர்னா, பைஸர் மருந்துகளை மத்திய அரசு அங்கீகரிக்காதபோது எவ்வாறு மாநில அரசுகளுக்கு விற்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் அரசுக்கும், டெல்லி அரசுக்கும் தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது என்று மாடர்னா மற்றும் பைஸர் நிறுவனங்கள் தெரிவித்தன. மத்திய அரசுடன் மட்டுமே நேரடிாயக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
ஆனால், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்தாலும்அதை செயல்பாட்டுக்கு வராத சூழலில்தான் இருந்து வருகிறது. தற்போது பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வரும் சூழலில், தடுப்பூசியை இறக்குமதி செய்து உதவ வேண்டும் என மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “ பஞ்சாப், டெல்லி அரசுகளுக்கு தடுப்பூசி விற்க முடியாது, மத்திய அரசுடன் மட்டுமே விற்பனை ஒப்பந்தம் செய்வோம் என பைஸர், மாடர்னா நிறுவனங்கள் கூறியதில் ஏதேனும் வியப்பு இருக்கிறதா?
மாநிலங்கள் நேரடியாக வெளிநாட்டு மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியது சுயநலமிக்க முடிவு.
இந்தியாவில் பைஸர், மாடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு இன்னும் அனுமதியளிக்கவில்லை. அப்படியிருக்கும் போது எவ்வாறு மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை அந்த நிறுவனங்கள் விற்பனை செய்வார்கள்.
தடுப்பூசி கொள்முதலை பரவலாக்க வேண்டும் என்று நாங்கள் கூறி அறிவுரைகளையும், நீதிமன்றங்கள் கூறிய ஆலோசனைகளையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது.
மோடி அரசு இரக்கமற்றதாகவும், கொடூரமாகவும் இருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது, மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். என்ன துயரம்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அதீதமான தன்னம்பி்க்கை மற்றும் சுயபெருமையினால் தடுப்பூசிக்கு தாமதாகவே மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. பிரதமரும், அவருக்கு ஆதரவாக இருப்போரும் தோல்வி அடைந்த தங்களின் தடூப்பூசி முன்னெடுப்பை புகழ்வதில் பரபரப்பாக இருக்கிறார்கள். மே1-ம் தேதி முதல் 18 வயதுமுதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி எனக் கூறியது தவறுகளை மறைக்க செய்யப்பட்ட உத்தி” எனத் தெரிவித்தார்.