

சிபிஐ அமைப்பின் அடுத்த இயக்குநரைத் தேர்வு செய்ய பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் நேற்று கூடி ஆலோசித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் உத்தரப்பிரதேச டிஜிபி ஹெச்.சி.அவஸ்தி, சாஸ்த்ரா சீமா பால் இயக்குநர் ராஜேஷ் சந்திரா மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் வி.எஸ்.கே. கவுமுதி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச காவல் டிஜிபியாக இருக்கும் அவஸ்தி கடந்த 1985ம் ஆண்டு உ.பி. ஐபிஎஸ் கேடர். ஏற்கெனவே சிபிஐ அமைப்பில் இணை இயக்குநர், உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தற்போது உ.பி. அரசில் காவல் டிஜிபியாக அவஸ்தி பணியாற்றி வருகிறார்.
சாஸ்த்ரா சீமா பால் பிரிவின் இயக்குநர் ராஜேஷ்சந்திராவும் 1985-ம் ஆண்டு பிஹார் ஐபிஎஸ் கேடர். உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலராக இருக்கும் கவுமுதி கடந்த 1986ம் ஆண்டு ஆந்திர மாநில ஐபிஎஸ் கேடர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, எதிர்க்கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அடங்கிய குழு நேற்று மாலை பிரதமரின் இல்லத்தில் கூடி ஆலோசித்துள்ளனர். இந்தக் கூட்டம் ஏறக்குறைய 90 நிமிடங்கள்வரை நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் சிபிஐ இயக்குநரைத் தேர்வும் செய்யும் முறைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
கூட்டம் முடிந்தபின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அளித்த பேட்டியில், “ சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் முறை கமிட்டியின் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கிறது. கடந்த 11ம் தேதி நான் 101 பேரின் பெயர்கள் கொடுத்தேந், இன்று 10 பேரை பட்டியலிட்டனர், மாலை 4 மணிக்கு 6 பேர் மட்டுமே பட்டியலி்ல இருந்தனர். மத்திய பணியாளர் பயிற்சி்த்துறையின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.
சிபிஐ இயக்குநர் பதவி கடந்த பிப்ரவரி 4ம் தேதியிலிருந்து காலியாக இருக்கிறது. சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்றபின் யாரையும் நியமிக்கவில்லை.அதற்கு பதிலாக கூடுதல் பொறுப்பாக கூடுதல் இயக்குநர் பிரவீண் சின்ஹாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.