Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

பிரசார் பாரதி அனுமதி: தூர்தர்ஷன் இன்டர்நேஷனல் விரைவில் ஒளிபரப்பு தொடக்கம்

புதுடெல்லி

பொதுத்துறை தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷன் விரைவில் சர்வதேச ஒளிபரப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் பிரசார் பாரதி வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்தியாவில் கரோனா 2-வது அலை பரவல், தடுப்பூசி திட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் மிகவும் தவறான தகவல்களை பரப்பின. இதுபோன்ற ஒரு தரப்பான தவறான தகவல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டிடி இன்டர்நேஷனல் அமையும் என பிரசார் பாரதி அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான நிகழ்ச்சிகள் பல மொழிகளில் தயாரித்து அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் மட்டும் பார்ப்பது மட்டுமின்றி, பிற வழிகளில் அதாவது இணையதளம் உள்ளிட்டவற்றின் மூலமும் பார்க்க வழி வகை செய்யப்படுகிறது.

தற்போது 35 நாடுகளில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள் மூலமாக ஒளிபரப்பாகிறது. இது அனைத்து நாடுகளிலும் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பல மொழிகளை உள்ளடக்கிய தொலைக்காட்சி சேனலாக, டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் இது ஒளிபரப்பாகும்.

இத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கு முதல் கட்டமாக உத்திசார் ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, எந்த பிராந்திய மக்களுக்கு எந்த நிகழ்ச்சி முக்கியமானது என்பதைக் கண்டறிய இந்த ஆலோசனை நிறுவனம் உதவும்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x