Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

வாழ்க்கையில் எதுவும் எனக்கு எளிதாக கிடைக்கவில்லை: உலகின் நீண்ட வழித்தடத்தில் விமானத்தை இயக்கிய சாதனைப் பெண் சோயா அகர்வால் தகவல்

சோயா அகர்வால்

மும்பை

கடந்த ஜனவரி மாதம், அமெரிக் காவின் சான்பிரான்சிஸ்கோ – பெங்களூரு இடையே ஏர் இந்தியா விமானத்தை முதன்முறையாக பெண் விமானிகள் குழு இயக்கி வரலாற்று சாதனைப் படைத்தது.

இளம் கேப்டன் சோயா அகர்வால் தலைமையில், 238 பயணிகளுடன், ஏர் இந்திய விமானம் ஒன்று, ஜனவரி 9-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டு வடதுருவம் வழியாக 16,000 கிமீ தூரத்தை 17 மணி நேரம் தொடர்ச்சியாக பயணித்து பெங்களூருவை வந்தடைந்தது.

இந்தப் பயணத்துக்கு தலைமை வகித்த கேப்டன் சோயா அகர்வால், தான் எவ்வாறு ஒரு விமானியாக ஆனார் என்பதை ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பம்பே’ அமைப்பிடம் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது:

விமானியாக ஆவதே என்னுடைய விருப்பம் என்பதை என்னுடைய எட்டு வயதிலே நான் தெரிந்துகொண்டேன். மொட்டை மாடியில் விமானத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் சொல்லிக்கொள்வேன், ‘அந்த விமானங்களில் ஒன்றில் நான் பறந்தால், அந்தநட்சத்திரங்களை தொட முடியும்’என்று. 1990-களில், நடுத்தர வர்க்ககுடும்பத்தில் வளரும் ஒரு பெண், அவளது எல்லையைத் தாண்டி கனவு காண அனுமதிக்கப்படமாட்டாள். நல்ல குடும்பத்துக்கு என்னை திருமணம் செய்து கொடுப்பதே என் அம்மாவின் எண்ணமாக இருந்தது.

அதனால் என்னுடைய கனவை பெற்றோரிடம் சொல்லத் தயங்கினேன். 10-ம் வகுப்பு முடித்ததும், விமானியாக மாற வேண்டும் என்ற என்னுடைய கனவை வீட்டில் சொன்னேன். அதைக் கேட்ட என்னுடைய அம்மா அழத் தொடங்கிவிட்டார். அப்பா, செலவை நினைத்து கவலைப்படத் தொடங்கினார். ஒரு வழியாக 12-ம்வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்தேன். பகுதிநேர அடிப்படையில் விமானப் படிப்பில் சேர்தேன். நான் சிறு வயதிலிருந்து சேமித்து வந்த பணத்தை கட்டணமாக செலுத்தினேன். கல்லூரி வகுப்பை முடித்துவிட்டு, விமானப் படிப்புக்குச் செல்வேன். வீடு திரும்ப இரவு 10 மணி ஆகிவிடும். அதன் பிறகு, கல்லூரி பாடங்களை முடிப்பேன். இவ்வாறு மூன்று வருடங்கள் சென்றன. கல்லூரியில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றேன். அப்பாவிடம் சென்று அதைக் கூறி, ‘என்னுடைய கனவை தொடர அனுமதிப்பீர்களா’ என்று கேட்டேன். இதற்கு ஒப்புக்கொண்ட அவர், விமானப் படிப்புக்கான செலவை சமாளிக்க கடன் வாங்கினார்.

ஒரு வழியாக விமானப் பயிற்சியை முடித்தேன். ஆனால் உடனடியாக வேலை கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன். ஒரு நாள் ஏர் இந்தியா நிறுவனம் 7 விமானிகள் தேவைஎன்ற அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான தேர்வில் கலந்துகொண்டேன். என்னுடன் 3,000 பேர் அந்தத் தேர்வில் கலந்து கொண்டனர். எல்லா சுற்றுகளையும் சிறப்பாக கடந்து நான் தேர்வானேன்.

2004-ம் ஆண்டில் முதல் விமானத்தை துபாய்க்கு இயக்கினேன். இறுதியாக அந்த நட்சத்திரங்களைத் தொட்டுவிட்டேன். என் வாழ்க்கையில் எதுவும் எனக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. எனக்கு கவலை ஏற்படும் போதெல்லாம், எட்டு வயது சோயா என் கண் முன் வந்து போவாள். தன் இதயம் சொல்வதை பின் தொடர்ந்து செல்லும் தைரியம் கொண்டவள் அவள். என் வாழ்நாள் முழுவதும் நான் அப்படி இருக்க விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x