Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

நாட்டில் 5,424 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

நாட்டின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 5,424 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “கரோனா நோயாளிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு வருகிறது. நாட்டின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 5,424 பேருக்கு கறுப்புபூஞ்சை நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 4,556 பேர் கரோனா நோயாளிகள் அல்லது கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ஆவர். மேலும் இதில் 55 பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர்” என்றார்.

கரோனா நோய்த் தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் மருத்துவர்கள் கறுப்பு பூஞ்சை நோயுடன் போரிட்டு வருகின்றனர். இந்த நோய்த்தொற்று நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்குகிறது. நீரிழிவு போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த நோய் ஆபத்தான முடிவுகளை ஏற்படுத்துகிறது. கரோனா நோயாளிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளே, கறுப்பு பூஞ்சை நோயாளிகள் அதிகரிப்புக்கு காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

3.6% பேருக்கு பூஞ்சை தொற்று

ஐசிஎம்ஆர் விஞ்ஞானி காமினிவாலியா கூறும்போது, "மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளில் 3.6 சதவீதம் பேருக்கு கறுப்பு பூஞ்சை, பாக்டீரியா தொற்று ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் 78% பேருக்கு மருத்துவமனைகளிலேயே 2-வது நோய் தொற்று ஏற்படுகிறது. சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடை, கையுறை அணிவதால் அவர்கள் கைகளை சுத்தம் செய்வது போதுமானதாக இல்லை. இதுவும் நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்றுஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது" என்றார்.

ராம்தேவ் வருத்தம்

அலோபதி மருத்துவம் குறித்து,யோகா குரு ராம்தேவின் சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து, அவருக்கு மத்திய சுகாதார அமைச்சர்ஹர்ஷ் வர்தன் கடிதம் எழுதினார்.ராம்தேவின் கருத்து பொருத்தமற்றது என கூறியிருந்தார்.

இதையடுத்து ராம்தேவ் நேற்று முன்தினம், “எனக்கு வந்த வாட்ஸ் அப் தகவலை படிக்கும்போது, அந்தக் கருத்து வெளிப்பட்டது. இது யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x