Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

கரோனா ஊரடங்கு எதிரொலி- அலிகர் பூட்டு தயாரிப்பு தொழில் கடும் பாதிப்பு

லக்னோ

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் உ.பி.யின் அலிகர் நகரில் பூட்டு தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே பூட்டு தயாரிப்பில் அலிகர் முன்னிலை வகிக்கிறது. இதற்கு இணையாக தமிழகத்தின் திண்டுக்கல் பூட்டு பிரபலமாக இருந்தது. ஆனால் இப்போது திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு தொழில் நலிவடைந்துள்ளது. தற்போது அலிகர் நகரின் பூட்டு தொழிலும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாக இங்கு மேற்கொள்ளப்படுவதால் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு(ஜிஎஸ்டி) முறையில் இத்தொழில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. மேலும் மின் கட்டணம், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் சீன பூட்டுகளால் ஏற்பட்ட விலை போட்டி ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் இத்துறை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சுமார் 6,500-க்கும்மேற்பட்ட தொழிற்கூடங்கள், குடிசைத் தொழில்போல பூட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரிஅலிகர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலர் தினேஷ் சந்த் வர்ஷ்னே, முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கைகளால் மட்டுமே பூட்டு தயாரிக்கும் பாரம்பரிய முறையில் இத்தொழில் துறையினர் பலரும்ஈடுபட்டிருந்தனர். ஆனால் இப்போது மாறிவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப பலர் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தியுள்ளனர். இதனால் போட்டிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளனர் என்று பூட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவன உரிமையாளர் விஜய் குமார் பஜாஜ் குறிப்பிட்டார்.

முதலில் பண மதிப்பு நீக்கம் இத்தொழிலுக்கு பாதிப்பாக வந்தது. அடுத்து டிஜிட்டல் மயமாக்கம் பெரும் சவாலாக அமைந்தது. மூன்றாவதாக சரக்கு மற்றும் சேவை வரி பெரும் நெருக்குதலைத் தந்தது. தற்போது கரோனா கால ஊரடங்கு மிகப் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணையை ஆகஸ்ட் 31 வரை நிறுத்தி வைக்குமாறு வங்கிகளுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில வியாபாரிகள் சங்க செயலர் பிரதீப் கங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x