பாராபங்கி மசூதி இடிப்பு மீதான புகார் எதிரொலி: 3 பேர் விசாரணை குழு அமைத்தது உத்தரபிரதேச அரசு

பாராபங்கி மசூதி இடிப்பு மீதான புகார் எதிரொலி: 3 பேர் விசாரணை குழு அமைத்தது உத்தரபிரதேச அரசு
Updated on
1 min read

உத்தரபிரதேசம் பாராங்கியின் ராம் ஸனேஹி காட் தாலுகா அலுவலகம் அருகில் கரீப் நவாஸ் மசூதி இருந்தது. சுமார் 100 வருடங்கள் பழமையானது எனக் கூறப்படும் இந்த மசூதி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டதாக கடந்த மார்ச் 15-ம் தேதி, மசூதியின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கான பதில் கிடைக்காத நிலையில் பாராபங்கியின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று ராம் ஸனேஹி காட் தாலுகாவின் அரசு நிர்வாகத்தால் மே 17-ல் மசூதி இடிக்கப்பட்டது.

இதன் மீதான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு மே 31 வரை மசூதியை இடிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இச்சூழலில் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும், அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சினையை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கவனத்துக்கு உத்தர பிரதேச வஃக்பு வாரியம், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் உபியின் எதிர்கட்சிகள் கொண்டு சென்றன.

இதைத்தொடர்ந்து உத்தர பிரதேச அரசு சார்பில் நேற்று மசூதி இடிப்பு குறித்து ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட் டுள்ளது. 3 பேர் கொண்ட இக்குழுவிற்கு மாநில சிறுபான்மை நலத்துறை சிறப்பு செயலாளரான ஷிவாகாந்த் துவேதி தலைமை வகிக்கிறார். இதே துறையின் லக்னோ மற்றும் அயோத்யா மாவட்ட அலுவலகத்தின் துணைஇயக்குநர்கள் இருவர் அதன் உறுப்பினர்களாக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, இடிக்கப்படு வதற்கு முன்பாக மசூதியின் போலி ஆவணங்களுடன் உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யமுயன்றதாகப் புகார் எழுந்தது. இதற்கானப் புகாரை பாராபங்கிகாவல்துறையிடம் அம்மாவட்டத்தின் சிறுபான்மை நலத்துறை அதிகாரி அளித்திருந்தார். இதில் மசூதியின் 7 நிர்வாகிகள் மற்றும் வஃக்பு வாரிய அலுவலக ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்த சட்டவிரோதப் பதிவு குறித்தும் அரசு அமைத்துள்ள மூவர் குழு விசாரிக்க உள்ளது. இதன் அறிக்கையை அடுத்த 15 நாட்களில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மசூதி இடிப்பை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் வஃக்பு வாரியமும் உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவ தாகவும் ஏற்கனவே அறிவித் துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in