

கேரள மாநிலம், பையனூர் அருகில் உள்ள வெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரேமச் சந்திரன்(51). அதேபகுதியில் ஆட்டோ ஓட்டுகிறார். கரோனா பரவல் அதிகரித்த வேளையில், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று வந்த அழைப்பு களை கரோனா பயத் தால் ஆட்டோ டிரைவர்கள் பலர் ஏற்கவில்லை.
அப்படியான சூழலில் பயம் துளியும் இன்றி, போதிய முன்னெச்சரிக்கையுடன் இதுவரை 500-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரேமச்சந்திரன். இதனால் இவரது ஆட்டோவை ‘ஏழை
களின் ஆம்புலன்ஸ்’ என்று அன்புடன் அழைக்கின்றனர்.
பிரேமச்சந்திரன் ஆட்டோ வில் கிருமி நாசினி வைத்துள்ளார். இரண்டு மாஸ்க் அணிந்து ஆட்டோ ஓட்டுகிறார். கரோனா நெருக்கடியான நேரத்தில் சொந்தமாக காரோ, ஆம்புலன்ஸோ பிடித்து மருத்துவமனைக்குச் செல்ல முடியாத விளிம்புநிலை மக்களுக்கு பிரேமச்சந்திரனின் ஆட்டோதான் நம்பிக்கை வெளிச்சம். நள்ளிரவில் வரும் அழைப்புகளையும் பிரே
மச் சந்திரன் நிராகரிப்பதில்லை.
இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் பிரேமச்சந்திரன் கூறும்போது, “கடந்த ஆண்டு, மார்ச் மாதம் வளைகுடா நாட்டில் இருந்து திரும்பிய கர்ப்பிணிபெண் ஒருவர் கரோனா அறிகுறியுடன் அதற்கான பரிசோதனைக்குச் செல்வதற்காக என் ஆட்டோவில் ஏறினார். அப்போது வெளி நாடுகளில் கரோனாவுக்கு ஏராளமானோர் இறந்து கொண்டிருந்தனர். அதனால் அவரை யாருமே அழைத்துச் செல்லாத நிலையில்நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. அப்போதுதான்கரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதில் இருக்கும் சிக்கல்களை ஆழமாக உள்வாங்கினேன்.
கரோனா காலத்தில் வசதி படைத்தவர்கள் ஏழைகளுக்கு பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து உதவுகின்றனர். நான் சாதாரண ஆட்டோ ஓட்டுநர். என்னால் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சேவையைத்தான் செய்யமுடியும். அதிலும் ஏழ்மைநிலையில் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளிடம் கட்டணம் கேட்டு வாங்குவதில்லை. ஒவ்வொரு முறை சவாரிக்கு சென்று வந்ததும் ஆட்டோவை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து விடுவேன். அதேபோல் கைகளில் கையுறை, முகத்தில் மாஸ்க் அணிந்திருப்பேன். விளிம்பு நிலையில் இருப்போர் சவாரிக்கு அழைக்கும்போது கரோனாவைக் காரணம்காட்டி நிராகரிப்பது சரியில்லை எனத்தோன்றியது. அதனால்தான் இடைவிடாது கரோனா நோயாளிகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறேன். கரோனா பாசிட்டிவ் நோயாளிகளில் 500-க்கும் அதிகமானவர்களை என் ஆட்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. எனது இந்த சேவைக்கு என் தாய் கல்யாணி, மனைவி லத்திகா, மகன்கள் அகில், ஆதித் ஆகியோரும் ஊக்குவிப்பாக இருக்கின்றனர்” என்றார்.ஆட்டோ ஓட்டுநர் பிரேமச்சந்திரன்.