

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை யில் அருண் ஜேட்லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 1999 முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்த காலத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள் ளார். மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமே விசாரணை கமிஷன் அமைக்கும் அதிகாரம் இருப்பதாக வும், யூனியன் பிரதேச அந்தஸ்தில் உள்ள டெல்லி அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என கூறி உள்துறை அமைச்சகத்துக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அண்மையில் கடிதம் எழுதினார்.
இதனால் கேஜ்ரிவால் நஜீப் ஜங் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஊழல் கண் காணிப்புத் துறை முதன்மை செயலர் சேத்தன் சிங் தலைமை யிலான 3 பேர் கொண்ட குழு, 237 பக்கங்கள் கொண்ட தன் அறிக் கையை சமர்பித்துள்ளது.
அதில் அருண் ஜேட்லி தன் பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டார் என்றோ வேறு விதமான வழிகளில் ஆதாயம் அடைந்தார் என்றோ எவ்வித குற்றச்சாட்டும் இடம்பெறவில்லை. அதே சமயம் டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் பணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் எந்தவொரு பக்கத்திலும் அருண் ஜேட்லியின் பெயர் இடம்பெறவில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டில் சீர்த்திருத்தம் கொண்டு வருவதற்கான பரிந் துரைகளை தயார் செய்து வரும் உச்ச நீதிமன்றம் அமைத்த நீதிபதி லோதா கமிட்டியை, டெல்லி அரசு அணுக வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் போது மோசடி புகார் புலனாய்வு அதிகாரி கள் நடத்திய விசாரணையிலும், ஜேட்லிக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.