

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘அழுக்கு தெருக்களில் இல்லை, நம் மனதில்தான் உள்ளது” என்று பேசினார்.
”அழுக்கு தெருக்களில் இல்லை, சமூகத்தை நாம்-பிற என்று பிரிக்கும் கருத்துகளை அனுமதிக்கும் நம் மனங்களில்தான் அழுக்கு நிரம்பியுள்ளது.
ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி வன்முறைச் சம்பவங்களைப் பார்த்து வருகிறோம். இந்த வன்முறையின் இருதயத்தில் இருப்பது இருள், பயம் மற்றும் நம்பிக்கையின்மை. இப்படி தினப்படி அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள அகிம்சை, உரையாடல், அறிவு ஆகியவற்றின் சக்தியை நாம் மறக்கலாகாது.
நாம் நமது பொதுவிவாதங்களில் வன்முறையை அகற்ற வேண்டும், அதாவது உடல் ரிதியான, வார்த்தை ரீதியிலான வன்முறைகளைக் களைய வேண்டும். அகிம்சா வழி சமுதாயம் மட்டுமே அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பை உறுதி செய்யும், குறிப்பாக நலிவுற்றோர் மற்றும் ஏழைகள் ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
பாராட்டுக்குரிய, வரவேற்பு பெற்ற தூய்மை இந்தியா திட்டத்தை நாம் வெற்றியடையச் செய்ய வேண்டும். அதாவது நம் மனத்தையும் சுத்தம் செய்யும் பெரிய அளவிலான லட்சியத்துடனும், விடா முயற்சியுடனும் இத்திட்ட விரிவு பெற்று அனைத்து விதங்களிலும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும்.
மனிதத் தன்மையை அழிக்கும் நடைமுறைகள் உள்ளவரை, நாம் உண்மையான தூய்மை இந்தியாவை எட்ட முடியாது" இவ்வாறு கூறினார் பிரணாப் முகர்ஜி.