

கேரளாவில் 15-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இன்று கடும் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகை புரிந்து, பதவி ஏற்றுக்கொண்டனர்.
கேரள சட்டப்பேரவையில் 140 எம்எல்ஏக்களில் 136 பேர் இன்று பதவியேற்றனர். எம்எல்ஏக்கள் கே.பாபு, எம்.வின்சென்ட், அப்துர் ரஹிம் உள்ளிட்டோர் இன்று உடல்நலக் குறைவால் அவைக்கு வரவில்லை.
ஒவ்வொரு எம்எல்ஏவும் பெயரின் அகரவரிசைப்படி எழுந்து நின்று பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் வள்ளிக்குன்னு தொகுதி ஐயுஎம்எல் எம்எல்ஏ அப்துல் ஹமீது மாஸ்டர் முதலாவதாகப் பதவி ஏற்றார். கடைசியாக வடக்கன்சேரி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ சேவியர் சித்தலப்பள்ளி பதவி ஏற்றார்.
சுகாதாரத்துறை அமைச்சராக கே.கே.சைலஜாவுக்கு பதிலாகநியமிக்கப்பட்டுள்ள வீணா ஜார்ஜ், கடவுளின் பெயரில் பதவி ஏற்றார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனைத் தோற்கடித்த மஞ்சேஸ்வரம் எம்எல்ஏ ஏ.கே.எம் அஷ்ரஃப் கன்னட மொழியில் உறுதிமொழி ஏற்றார். மூவாற்றுப்புழா எம்எல்ஏ மாத்யூ குழநந்தன் ஆங்கிலத்தில் பதவி ஏற்றார். இன்னும் சில எம்எல்ஏக்கள் ஆங்கிலத்திலும், பல எம்எல்ஏக்கள் மலையாளத்திலும் பதவி ஏற்றனர்.
மார்க்சிஸ்ட் தொண்டர்களால் கொல்லப்பட்ட ஆர்எம்பி தலைவர் டி.பி.சந்திரசேகரின் மனைவியும், வடகரா எம்எல்ஏவுமான கே.கே.ரேமா, தனது கணவரின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்து வந்திருந்து பதவி ஏற்றார்.
தேவிகுளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான ஏ.ராஜா, தமிழில் பதவி ஏற்றுக்கொண்டார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் மாவட்டக் குழுவிலும் ராஜா உள்ளார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அந்தோனி லட்சுமண், ஈஸ்வரி தம்பதிக்கு பிறந்த ஏ.ராஜா, முதல் முறையாக எம்எல்ஏவாகப் பதவி ஏற்றார். கோவை சட்டக் கல்லூரியில் ராஜா சட்டம் பயின்றுள்ளார்.
கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா 2-வது வரிசையில் அமர்ந்திருந்தார். கடந்த முறை பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ இருந்தார். ஆனால் இந்த முறை அதையும் இழந்துவிட்டதால் எந்த உறுப்பினரும் அந்தக் கட்சிக்காக இல்லை.