

அமெரிக்காவின் பைஸர், மாடர்னா மருந்து நிறுவனங்கள் டெல்லி அரசுக்கு தடுப்பூசி விற்பனை செய்ய மறுக்கிறார்கள். அந்த நிறுவனங்களிடம் பேசி தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என இருகரம் கூப்பி மக்களுக்காக கேட்கிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 வயது முதல் 44 வயது உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பல மாநிலங்களும், சர்வதேச டெண்டர் மூலம் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதில் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் இருந்து மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை வாங்க கோரியிருந்த நிலையில் அந்த நிறுவனம் தடுப்பூசி சப்ளை செய்ய மறுத்துவிட்டது. இப்போது டெல்லிஅரசுக்கும் சப்ளை செய்ய மார்டனா, பைஸர் நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்கு அளி்த்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்காவின் பைஸர் மற்றும் மாடர்னா மருந்து நிறுவனங்களுடன் பேசி நேரடியாக தடுப்பூசி விற்பனை செய்யக் கோரினோம். ஆனால், அந்த நிறுவனங்கள் மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாகப் பேசி தடுப்பூசி விற்போம், மாநில அரசுகளுக்கு விற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டன.
நான் மத்திய அரசிடம் மக்களுக்காக இரு கரம் கூப்பி கேட்கிறேன், அந்த மருந்து நிறுவனங்களிடம் பேசி, தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், மாநிலங்களுக்கு வழங்கவும் உதவ வேண்டும்.
டெல்லியில் கரோனா 2-வதுஅலை மெல்ல அடங்கி வருகிறது. மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம்.
இதுவரை சீனாவிலிருந்து 6 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்திருக்கிறோம். 3 சேமிப்பு கிடங்கு உருவாக்கி ஒவ்வொன்றிலும் 2 ஆயிரம் சிலிண்டர்களை சேமித்துள்ளோம். இந்த சிலிண்டர்கள் 3-வது அலைக்கு பயன்படும். இந்திய வெளியுறவுத்துறையும், சீன தூதரகமும் எங்களுக்கு உதவின, இல்லாவிட்டால் இது சாத்தியமாகாது” எனத் தெரிவித்தார்
துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா கூறுகையில் “ டெல்லி அரசுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்க பைஸர், மாடர்னா நிறுவனங்கள் மறுத்துவிட்டன. 18 வயது முதல் 44 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் 400 மையங்களும் தடுப்பூசி இல்லாததால் மூடப்பட்டன. மத்திய அரசு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியும் இருப்பு இல்லை என்பதால் அந்த மையங்களும் மூடப்பட்டன.
மக்களைக் கரோனாவிலிருந்து காக்க இந்த நேரத்தில் தடுப்பூசி மிகவும் அவசியம். அதனால்தான் மாடர்னா, பைஸர், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனங்களுடன் பேசினோம்.கடந்த ஆண்டு ஸ்புட்னிக் நிறுவனத்துடன் பேசியபோது ஒப்புதல் கிடைக்கவில்லை, கடந்த மாதம்தான் கிடைத்தது. போர்காலச் சூழலாகக் கருதி பைஸர், மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய மத்திய அரசு உதவ வேண்டும். தடுப்பூசி திட்டத்தை நகைச்சுவையாக மாற்ற மத்திய அரசு முயலக்கூடாது “ எனத் தெரிவித்தார்.