Published : 24 May 2021 01:46 PM
Last Updated : 24 May 2021 01:46 PM

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை: 15 விமானங்கள், 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார்

புதுடெல்லி

யாஸ் புயல் நாளை மறுதினம் வங்கக்கடல் பகுதயில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மேற்குவங்கம், ஒடிசாவுக்கு அனுப்பட்டுள்ளனர்.

மே 23-ஆம் தேதி வரை இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் 70 டன் சரக்குகளையும் ஜாம்நகர், வாரணாசி, பாட்னா மற்றும் அரக்கோணத்திலிருந்து கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் போர்ட் பிளேயருக்கு ஏற்றிச் சென்றுள்ளது.

16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பிரிவின் பத்து படைகள் புவனேஸ்வருக்கும் கொல்கத்தாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு, ஐந்து குழுக்கள் போர்ட் பிளேயரில் தயார் நிலையில் உள்ளன.

கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுடன் தயாராக உள்ளன.‌

நான்கு நீச்சல் குழுக்கள் மற்றும் பத்து வெள்ள நிவாரணக் குழுக்கள், கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் சிலிகாவில் பொது நிர்வாகத்திற்கு குறுகிய காலத்தில் உதவிகளை வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்வதற்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏழு வெள்ள நிவாரண குழுக்களும் இரண்டு நீச்சல் குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக, விமானப்படைக்கு சொந்தமான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விசாகப்பட்டினம் மற்றும் போர்ட் பிளேயரில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் மூன்று பொறியாளர் பணிக் குழுக்கள், பொது நிர்வாகத்தின் அழைப்பிற்காக காத்திருக்கின்றன. பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களின் நிர்வாகத்தினருடன் ஆயுதப்படை தொடர்பில் உள்ளது. கொவிட்- 19 சிகிச்சைக்காகவும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிராணவாயுவை மருத்துவமனைகளுக்குதடையின்றி கொண்டு செல்வதற்காகவும் சாலை மற்றும் ரயில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆயுதப்படை குழுக்கள் பணியாற்றுகின்றன.

புயலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை எதிர்கொள்ளவும், உயிர்களை பாதுகாக்கவும் ஆயுதப்படை முழு அளவில் தயாராக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x