உடைத்த செல்போனுக்கு பதிலாக புதிய மொபைல் வாங்கிக் கொடுங்கள்: இளைஞரை அறைந்த மாவட்ட ஆட்சியருக்கு சத்தீஸ்கர் முதல்வர் உத்தரவு

இளைஞரைக் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா | படம்: ஏஎன்ஐ.
இளைஞரைக் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

ராய்பூரில் ஊரடங்கை மீறி வெளியே வந்த இளைஞரைக் கன்னத்தில் அறைந்த ஆட்சியர் அவரின் செல்போனையும் பறித்து உடைத்தார். அதற்கு பதிலாக புதிய செல்போனை வாங்கி இளைஞருக்குத் தர வேண்டும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.

சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா நேற்று முன்தினம் நகரில் கரோனா ஊரடங்கை ஆய்வு செய்தார். அப்போது ஒரு இளைஞர் சாலையில் வந்ததைப் பார்த்த ஆட்சியர் காரைவிட்டு இறங்கினார்.

அந்த நபரிடம் விசாரித்த ஆட்சியர் ரன்பீர் சர்மா, திடீரென அந்த நபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, செல்போனைப் பறித்துத் தூக்கி எறிந்தார். அதுமட்டுமல்லாமல் அருகே இருந்த போலீஸாரை அழைத்து அடித்து அனுப்புமாறு ஆட்சியர் கூற, போலீஸாரும் இளைஞரை அடித்துத் துவைத்தனர்.

இளைஞரை மாவட்ட ஆட்சியர் கன்னத்தில் அறைந்த சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பரப்பினர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலாகி, மாவட்ட ஆட்சியர் எவ்வாறு பொதுமக்களை அடிக்க முடியும் என்று கேள்வி எழுந்தது.

இந்த சம்பவத்தையடுத்து, மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா வீடியோ வெளியிட்டு தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரினார். மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா நடந்துகொண்ட விதத்துக்கு ஐஏஎஸ் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா சர்மா குறித்த வீடியோ வைரலானதையடுத்து, அவரை இடமாற்றம் செய்து முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டார். முதல்வர் பூபேஷ் பாகல் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா இளைஞர் ஒருவரை அடித்த வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இது கண்டிக்கத்தக்து, துரதிர்ஷ்டவசமானது.

சத்தீஸ்கரில் இதுபோன்ற சம்பவங்களைப் பொறுக்கமுடியாது. இந்த ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்துக்கு வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பூபேஷ் பாகல் | கோப்புப்படம்
முதல்வர் பூபேஷ் பாகல் | கோப்புப்படம்

இந்நிலையில் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ இளைஞரைக் கன்னத்தல் அறைந்து, செல்போனைப் பறித்து உடைத்த ஆட்சியர் ரன்பீர் சர்மாவுக்கு முதல்வர் பூபேஷ் பாகல் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, இளைஞரின் செல்போனை உடைத்ததற்காக அவருக்கு புதிய செல்போனை ஆட்சியர் தனது சொந்தச் செலவில் வாங்கித் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் ஐஏஎஸ் சங்கத்தின் தலைவர் சி.கே.கைத்தான் கூறுகையில், “மூத்த ஐஎஏஎஸ் அதிகாரி பொதுமக்களிடம் இவ்வாறு நடக்கக்கூடாது. தவறு செய்தால், சட்டப்படி என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்யலாம், கன்னத்தில் அறைவது முறையானது அல்ல. ஆட்சியர் சர்மா அவரின் சொந்தச் செலவில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு செல்போன் வாங்கித்தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in