

கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் 15-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு நடக்கிறது.
மாமனாரும் அமைச்சரவையில் மருமகன், புதிய எதிர்க்கட்சித் தலைவர், அதிகமான பெண் அமைச்சர்கள் போன்ற பல்வேறு வித்தியாசமான அம்சங்களுடன் புதிய சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 14ம் தேதிவரை நடக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியவுடன் இடைக்கால சபாநாயகரும் குன்னமங்கலம் எம்எல்ஏ பிடிஏ ரஹிம், எம்எல்ஏக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அதன்பின் நாளை நடக்கும் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சபாநாயகராக திரிதலா எம்எல்ஏ எம்.பி.ராஜேஷ் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக காங்கிரஸ் இதுவரை யாரையும் நிறுத்தவில்லை. காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் சபாநாயகருக்கு எந்த வேட்பாளரையும் நிறுத்தாது எனத் தெரிகிறது.
வரும் 28-ம் தேதி ஆளுநர் முகமது ஆரிஃப்கான் பாரம்பரிய முறைப்படி புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டக் கூட்டத்தில் உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து 2021-22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதிஅமைச்சர் கே.என். பாலகோபால் தாக்கல் செய்யஉள்ளார்.
கேரளாவில் இன்று கூட உள்ள 15-வது சட்டப்பேரவை பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ந்து 2-வது முறையாக ஒரே அரசும், முதல்வரும பதவி ஏற்கஉள்ளனர்.