Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

ஜார்க்கண்டில் 5 வயதில் பிரிந்து சென்று 18 வயதில் குடும்பத்தினருடன் இணைந்த இளைஞர்

ஜார்க்கண்டில் 5 வயது குழந்தையாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர், ‘வீடியோ கால்' மூலமாக தனது கிராமத்தை அடையாளம் கண்டு 18 வயதில் தனது உறவினர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள மசாஞ்சோர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் தெஹ்ரி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது தந்தை மரணமடைந்தார். அதன் பிறகு, அவனது தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தீபக்கை அவரது அத்தை உ.பி.க்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு ஆண்டுகள் அங்கு இருந்த தீபக், பின்னர் தனது அத்தைக்கு தெரியாமல் சொந்த ஊர் திரும்பும் நோக்கில் ரயில் ஏறியுள்ளான். அந்த ரயிலோ அவனை ராஜஸ்தானில் இறக்கிவிட்டது. கையில் பணம் இல்லாமல் பசியுடன் சுற்றித்திரிந்த 7 வயது சிறுவனான தீபக் தெஹ்ரியை, அங்கிருந்த போலீஸார் பிகானீரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர். சிறிது நாட்கள் வீடு செல்ல வேண்டும் என முரண்டு பிடித்த தீபக், பின்னர் அங்கிருந்த மற்ற சிறுவர்களுடன் சஜகமாக பழக ஆரம்பித்தான். வருடங்கள் உருண்டோடின. தீபக் 18 வயது இளைஞனாக மாறினான்.

ஆசிரமத்தில் நண்பர்களுடன் தீபக் உரையாடும்போது, அவ்வப்போது அவனது கிராமத்தின் அழகு அங்குள்ள அணை குறித்து பேசுவது வழக்கம். எனினும், தனது மாநிலத்தின் பெயரோ, கிராமத்தின் பெயரோ அவனுக்கு தெரியாது. இந்நிலையில், அந்த ஆசிரமத்தின் உரிமையாளரான அர்விந்த் ஆச்சார்யா, கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவுக்கு வேலை நிமித்தமாக சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள மசாஞ்சோர் அணையை பார்வையிட்ட அவருக்கு, தீபக் கூறிய அணையின் தோற்றம் அப்படியே நினைவுக்கு வந்தது.

இதையடுத்து, உடனடியாக தீபக்கை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்ட அவர், அந்த இடத்தை சுற்றிக் காட்டினார். இதனைப் பார்த்த தீபக்கும், அதுதான் தனது கிராமம் என உறுதிபட கூறினான்.

இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டு ஜார்க்கண்டுக்கு வந்த தீபக்கை அவரதுஉறவினர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆரத் தழுவி வரவேற்றனர். இதுகுறித்து தீபக் கூறுகையில், “எனது அடையாளம் என்னவென்றே தெரியாமல் இத்தனை நாட்கள் இருந்தேன். இப்போதுதான் எனது உறவினர்களை அடையாளம் கண்டிருக்கிறேன். இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இனி எனது வாழ்க்கையை இங்குதான் கழிக்க இருக்கிறேன்” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x