Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

மெட்ரோ ரயில் நிலையங்களில் உயிரிக் கழிவறைகள்: மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம்

புனே

கரோனா சிகிச்சைக்கு 2டிஜிமருந்து, ஆக்சிஜன் கருவிகள் என பங்களித்து வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உயிரிக்கழிவறையை (பயோ டைஜஸ்டர்) சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தது. இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி 'உயிரி செரிமானி எம்.கே.II' என்ற பெயரில் மேம்பட்ட உயிரிக்கழிவறையை தற்போது உருவாக்கியுள்ளது.

மத்திய – மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் (மகா-மெட்ரோ), டி.ஆர்.டி.ஓ நிறுவனமும் தண்ணீர் சேமிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, புனே மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘உயிரிக் கழிவறைகள்' அமைக்கப்படுகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பு கையெழுத்தானது. மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் டிஆர்டிஓ நிறுவனத்தின் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 2.40 லட்சம் உயிரிக் கழிவறைகளை ரயில்பெட்டிகளில் இந்திய ரயில்வே ஏற்கனவே நிறுவியுள்ளது.

பனிமலையில் பணியாற்றும்ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தொழில்நுட்பம். காற்றில்லா பாக்டீரியா (Anaerobic Bacteria) தொகுதி தான் இதன் சூட்சுமம். இந்த பாக்டீரியா மனிதக்கழிவை நீர், மீத்தேன், கார்பன் டை ஆக்சைட் எனப் பிரிக்கிறது. வெளிவரும் நீர் தெளிவானது, வாசனையற்றது, தோட்டத்திற்கும், உபகரணங்களை கழுவுவதற்கும் பயன்படுத்தலாம். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, பசுமை தொழில்நுட்பமான உயிரிக்கழிவறை இடத்தையும், தண்ணீரையும் சேமிக்கிறது. செலவும் அதிகமில்லை.

படகில் உயிரிக் கழிவறை

காஷ்மீரின் தால் ஏரியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சியாக, படகு வீடுகளில் 'உயிரிக்கழிவறை எம்.கே II’ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தால் ஏரியை சுற்றி அமைந்திருக்கும் குடியிருப்புகளில் உயிரிக் கழிவறைகள் அமைக்கப்பட இருக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தின் ஏரிகள் மற்றும் நீர்வழிகள் மேம்பாட்டு ஆணையம் 100 உயிரிக் கழிவறைகளை இதற்காக கொள்முதல் செய்ய இருக்கிறது.

ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கருத்து

இதுகுறித்து ராணுவ டில்லிபாபு கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, குறைந்ததண்ணீர் செலவாகும் இந்ததொழில்நுட்பத்தை, புதிதாக கட்டப்படும் வீடுகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக் கலாம். ஏற்கனவே இயங்கி வருகிற கழிவறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைக்கலாம்.

உயிரிக் கழிவறை அமைப்பதற்கு கழிவுநீர் வடிகால் வசதிதேவையில்லை. கழிவுகள் முழுமையாக மாற்றம் அடைவதால், அவைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அப்புறப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

எனவே, வடிகால் வசதியற்ற பகுதிகளில், பள்ளிகளில் இக்கழி வறைகளை அமைக்கலாம். நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்கள், தீவுப்பகுதிகளில் அமைக்கலாம். பயன்பாட்டை பரவலாக்கும் நோக்கில் டி.ஆர்.டி.ஓ-வின் உயிரிகழிவறை தொழில்நுட்பம், தேசியஅளவில் பல தொழில் நிறுவனங்களிடம் பகிரப்பட்டுள்ளது.

இவ்வாறு டில்லிபாபு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x