

சக மல்யுத்த வீரரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமாரையும், அவரது உதவியாளரையும் டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர்.
டெல்லி போலீஸாரின் கண்காணிப்பிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சுஷில் குமாரும், அவரின் உதவியாளர் அஜெயும் தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த 4-ம் தேதி சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.
மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தன்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை ஹரியாணா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நீண்ட தேடுதலுக்குப்பின் டெல்லியில் பதுங்கியிருந்த சுஷில் குமாரையும், அவர் தப்பிக்க பல்ேவறு உதவிகளைச் செய்த உதவியாளர் அஜெயையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.
இது குறித்து சிறப்புப்புப்படையின் காவல் ஆணையர் நீரஜ் தாக்கூர் கூறுகையில் “ சுஷில் குமாரைப் பிடிப்பதற்காக ஆய்வாளர்கள் சிவக்குமார், கரம்பிர் ஆகியோர் தலைமையிலும், ஏசிபி அத்தர் சிங் மேற்பாவையிலும் தேடுதல் நடந்தது. இதில் டெல்லியில் உள்ள முந்த்கா பகுதியில் சுஷில்குமாரும், உதவியாளர் அஜெயும் பதுங்கி இருப்பதையடுத்து, அங்கு தனிப்படையினர் சென்றனர்.
போலீஸாரைப் பார்த்ததும் இரு சக்கரவாகனத்தி்ல் தப்பிக்க சுஷில்குமார் முயன்றபோது போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
விசாரணையில் சுஷில் குமார் டெல்லியில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லவும், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருக்கலாம் பல செல்போன்களையும், சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளார். இதனால்தான் சுஷில் குமாரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி சுஷில்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.