டெல்லியில் 2.5 சதவீதமாகக் குறைந்த தொற்று: ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு; முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி | படம் ஏஎன்ஐ
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி | படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டெல்லியில் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு மேலும் ஒருவாரம் அதாவது இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவி்த்தார்.

டெல்லியில் தொற்று பரவல் தொடர்ந்து குறையும்பட்சத்தில் 31ம் தேதிக்குப்பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

கடந்த மாதம் 19ம் தேதியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி 28ஆயிரமாக இருந்த கரோனா தொற்று, டெல்லியில் நடைமுறைப் படுத்தப்பட்ட லாக்டவுன் தினசரி தொற்று 1,600ஆகக் குறைந்துள்ளது, பாஸிட்டிவ் சதவீதம் 2.5 சதவீதமாகச் சரிந்துள்ளது.

இதையடுத்து, கரோனா தொற்றைத் தொடர்ந்து குறைக்கும் வகையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இருந்த லாக்டவுன் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோ அதே நடைமுறை தொடரும். அத்தியாவசியப் பணிகள், அத்தியாவசியப் பணியில் உள்ள ஊழியர்கள், மருத்துவம், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல் பங்க், ஏடிஎம்உள்ளிட்டவை தொடர்ந்து இயங்கும்.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

டெல்லியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் கரோனா தொற்று 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 1,600 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனாலும் சராசரியாக நாள்தோறும் டெல்லியில் ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,

இன்னும் தொற்று குறைக்கப்பட வேண்டும்.என்றால் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஆதலால், ஊரடங்கு 31ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது

வரும் வாரத்தில் கரோனா தொற்று தொடர்ந்து குறையும் நிலையில் 31-ம் தேதியிலிருந்து படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும்.
நாம் கரோனா வைரஸை வென்றுவிட்டோம் என்றெல்லாம் சொல்லவில்லை. கட்டுப்படுத்தியிருக்கிறோம். இதேநிலையை தக்கவைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in