

டெல்லியில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கை சமாளிக்க முடியாமல், இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியிலிருந்து வெளியேறியதாக போக்குவரத்து துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 19ம் தேதி ஊரடங்கை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவி்த்தார். அதன்பின் ஊரடங்கு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4-வது வாரமாக லாக்டவுன் நீடித்து வருகிறது. அடுத்த வாரமும் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 4 வார லாக்டவுன் காலத்தில் டெல்லியில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெல்லியிலிருந்து வெளியேறி சொந்த மாநிலம் திரும்பினர்.
ஏப்ரல் 19ம் தேதி முதல் மே 14ம் தேதிவரை இதுவரை டெல்லியிலிருந்து பேருந்துகள் மூலம் 8 லட்சத்துக்கு 7 ஆயிரத்து 32 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றனர்.
இதில் ஊரடங்கின் முதல் வாரத்தில் மட்டும் 3லட்சத்து 79 ஆயிரத்து 604 தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றனர். 2-வது வாரத்தில் 2,12,448 தொழிலாளர்களும், 3-வதுவாரத்தில் 1,22,490 பேரும், 4-வது வாரத்தில் 92,490 பேரும் டெல்லியிலிருந்து வெளியேறினர். இந்த 4 வாரங்களில் மட்டும் மாநிலங்களுக்கு இடையே 21,879 முறை பேருந்து போக்குவரத்து நடந்துள்ளது .
இது குறித்து டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில், “ அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தகுந்த நேரத்தில் ஒத்துழைப்பு அளித்ததால், லாக்டவுன் காலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக சொந்த ஊரில் சேர்க்க முடிந்தது.
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊரில் சேர்க்க 500 பேருந்து குழுக்களை டெல்லி போக்குவரத்து ஏற்பாடு செய்திருந்தது. எந்த தொழிலாளயிடம் இருந்தும் அதிகமான கட்டம் வசூலிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.