

தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக, பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் புகழாரம் சூட்டினார்.
லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் பாஜக கூட்டணியில் இணைந்தார்.
முஷாபர்பூர் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் ராம்விலாஸ் பாஸ்வானும் கலந்துகொண்டு பேசியது:
"குஜராத்தில் 2002-க்குப் பிறகு எந்த வகுப்புக் கலவரமும் நடைபெறவில்லை. ஆனால், பீகாரில் மாதம்தோறும் கலவரம் நடக்கிறது. இந்தியா விதவிதமான பூக்களைக் கொண்ட பூங்கா என்றால், அதைப் பாதுகாக்கும் முனைப்பு காட்டும் தோட்டக்காரர் இவர் (மோடி).
நாட்டில் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளைஞர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்கள். நீங்கள் (மோடி) முள்முடி சூடப் போகிறீர்கள்.
சாதி, மதம், இன வேறுபாடுகளை மறந்துவிடுவோம். இன்றைய இளைஞர்களுக்குத் தொழில்நுட்ப முன்னேற்றம்தான் தேவை. அதைக் கொடுக்க வல்லவர் நம் எதிர்காலப் பிரதமர் மோடி.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, அரசியல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர். நாட்டின் வீசும் மோடி அலையால் மத்தியில் அவரது தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம். அவரது ஓராண்டு ஆட்சிக்குப் பின்னர் மோடியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது" என்றார் பாஸ்வான்.
இதேபோல், தனது பேச்சில் ராம்விலாஸ் பாஸ்வானை வெகுவாக புகழ்ந்து பேசினார் நரேந்திர மோடி.