

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி பிஹார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்ச ரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த மாதம் 27-ம் தேதி ஜம்முவில் பேசியபோது, ‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, பாகிஸ்தானிடமே இருக்கட்டும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவிடம் இருக்கட்டும்’’ என்றார்.
நாட்டுக்காக எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்தி வரும் நிலையில், பரூக் அப்துல்லா இவ்வாறு பேசியது அவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பிஹார் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் தாக்கூர் சந்தன் குமார் என்பவர் குற்றம்சாட்டினார். மேலும் பரூக் அப்துல்லா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீதாமர்ஹி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட தலைமை நீதிபதி, பரூக் அப்துல்லாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி தும்ரி போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.