

அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புவது தேசிய பணியாகும். ராமரின் ஆசியில் பதவிக்கு வந்தவர்கள் கோயில் கட்டு வதற்கான தேதியை அறிவித்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் இந்து அமைப்புகள் ராமர் கோயிலை கட்டுவதற்கு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்ப தாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். ஆனால், ராமர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் போல, ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளார். ராமர் கோயிலுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை கண்டு ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
ராமரின் ஆசியால் ஆட்சிக்கு வந்தவர்களும், முக்கிய பதவி களை பிடித்தவர்களும், இந்த சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் போதெல்லாம் ராமர் கோயில் பிரச்சினை எழுப்பப்படுகிறது. தற்போது கோயில் கட்டுவதற்கான செங்கற்களும் அங்கு குவிக்கப் பட்டு வருகின்றன. அவ்வாறு குவிக்கப்படும் கற்கள் கடந்த 25 ஆண்டுகளாக செதுக்கப்பட்டு வருகின்றன. இதனால் என்ன பயன்? ராமர் கோயில் கட்டுவது தான் முக்கியம்.
எனவே ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவித்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.