

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லை பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் முதலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சார்பில் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் விவசாயிகளும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா (விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் அமைப்பு) நேற்று கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆறு மாத காலமாக இரவும் பகலும் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். கடுமையான சீதோஷ்ண நிலை, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் எங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 470 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். விவசாயிகளின் நியாயமான கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்காக வரும் 26-ம் தேதி வரை அவகாசம் தருகிறோம். அதற்கு மேலும் அரசிடம் இருந்து நல்ல பதில் வரவில்லை என்றால், பெரிய அளவிலான போராட்டங்களை சந்திக்க நேரிடும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.