Last Updated : 22 May, 2021 05:10 PM

 

Published : 22 May 2021 05:10 PM
Last Updated : 22 May 2021 05:10 PM

அறிவியலுக்குப் புறம்பாகப் பேசும் பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ஐஎம்ஏ வலியுறுத்தல்

அறிவியலுக்குப் புறம்பாகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்தி, அறிவியல்ரீதியான மருந்துகளை அவமதிக்கும் யோகா குரு பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐஎம்ஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''யோகா குரு பாபா ராம்தேவ் தொடர்ந்து அறிவியலுக்குப் புறம்பாக, அலோபதி மருத்துவத்துக்கு எதிராக, அதுபற்றி முழுமையாகத் தெரியாமல் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தி வருகிறார். அலோபதி மருத்துவம் குறித்து எந்தப் பயிற்சியும், அனுபவமும் இல்லாமல் பேசும் கருத்துகள், நாட்டின் கற்றறிந்த சமூகத்துக்கு அச்சுறுத்தலாகவும், அவரின் கருத்துகளுக்கு ஏழை மக்கள் நம்பும் சூழலும் இருக்கிறது.

அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல் என்று பாபா ராம்தேவ் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபி ப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டும் அவை கரோனா நோயாளிகளைக் காக்கவில்லை என்று ராம்தேவ் பேசுகிறார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் ஒரு அலோபதி மருத்துவர். அவரும் நவீன கால மருத்துவத்தைக் கற்றுத்தான் மருத்துவராகவும் பணியாற்றி, தற்போது அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

பாபா ராம்தேவ் விடுக்கும் இந்தச் சவாலையும், குற்றச்சாட்டையும் மத்திய சுகாதாரத்துறை ஏற்று அலோபதி மருத்துவத்தின் தன்மையை விளக்க வேண்டும். அல்லது இதுபோன்று பேசும் பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, அறிவியலுக்குப் புறம்பாகச் செயல்படுவதிலிருந்து லட்சக்கணக்காண மக்களைக் காக்க வேண்டும்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழலைப் பயன்படுத்தி பாபா ராம்தேவ் மக்களிடையே அச்சத்தையும், மனவிரக்தியையும் ஏற்படுத்த முயல்கிறார். அவரின் சட்டவிரோத, அங்கீகரிக்கப்படாத மருந்து எனக் கூறப்படும் ஒருவகையான பொருளை மக்களிடம் விற்றுப் பணம் ஈட்டப் பார்க்கிறார்.

அறிவியல் ரீதியாகக் கற்று அறிந்த மருத்துவர்கள் அறிவுரைப்படி அலோபதி மருந்துகளை எடுக்காதீர்கள், அதை நம்பாதீர்கள் எனப் பேசி ஏராளமான மக்களின் உயருக்கு ஆபத்து விளைவிக்கும், விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியாத பாபா ராம்தேவைக் கைது செய்ய வேண்டும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த விஷயத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி உண்மையைச் சாமானிய மக்களுக்குக் கூறுவோம். நீதித்துறையின் கதவுகளையும் தட்டி சட்டரீதியாக நடவடிக்கை கோருவோம்.

வியாபாரத்தில் வெல்வதற்காக, அறிவியல்ரீதியான மருந்துகளையும், மருத்துவத்தையும் பழித்துப் பேசி மக்களைப் பயன்படுத்துவது என்பது மன்னிக்க முடியாத குற்றம்''.

இவ்வாறு ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x