

கரோனா வைரஸ் 2-வது அலையால் பல்வேறு செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வரும் நிலையில், உபரி மற்றும் ஈவுத்தொகையாக ரூ.99 ஆயிரத்து 122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலால் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன், அதனால் வரிவருவாய் குறைவு, நிதிச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் சிக்கியிருந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட உபரி நிதியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கவுள்ளது.
இதுதான் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த மிக அதிகபட்ச ஈவுத்தொகையாகும். இதற்கு முன் 2018-19ஆம் ஆண்டில் ரூ.1.76 லட்சம் கோடியை வழங்கியிருந்தது. இதில் ரூ.1.23 லட்சம் கோடி ஈவுத்தொகையாகும். ரூ.52,637 கோடி திருத்தப்பட்ட பொருளாதார முதலீடு கட்டமைப்பு நிதியாக வழங்கப்பட்டது.
வழக்கமாக ரிசர்வ் வங்கி தனது ஈவுத்தொகை கணக்கீட்டை நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் முதல் மார்ச் வரை எடுக்கும். ஆனால், இந்த முறை ஜூன் முதல் ஜூலை வரையிலான 9 மாதங்களைக் கணக்கில் எடுத்துள்ளது.
589-வது ரிசர்வ் வங்கி மத்திய வாரியக் கூட்டம் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை கவர்னர்கள் மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் தேவப்ரதா பத்ரா, எம்.ராஜேஸ்வர் ராவ், இயக்குநர்கள் என்.சந்திரசேகரன், சதீஸ் என்.மராதே, எஸ்.குருமூர்த்தி, ரேவதி ஐயர், சச்சின் சதுர்வேதி, நிதி அமைச்சக செயலர் தேபாஷிஸ் பாண்டே, பொருளாதார விவகாரத்துறை செயலர் அஜய் சேத் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''2021, மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த 9 மாத கணக்கீடு காலத்தில் சந்தை செயல்பாடுகள், முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த ஈவுத் தொகையான ரூ.99,122 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வாரியம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரச் சூழல், உலகப் பொருளாதாரச் சூழல், உள்நாட்டளவில் சந்திக்கும் பிரச்சினைகள், கரோனா 2-வது அலையிலும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தணிக்க ரிசர்வ் வங்கி எடுத்த நிதிக்கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த 9 மாத காலத்தில் (ஜூலை 2020 - 2021 மார்ச்) ரிசர்வ் வங்கியின் உபரிநிதியான ரூ.99,122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அவசரகால நிதியின் அளவு 5.50 சதவீதம் வைத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.